அதிக வெள்ள நிவாரண நிதி பெற விரைவில் டெல்லி செல்கிறேன் முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி


அதிக வெள்ள நிவாரண நிதி பெற விரைவில் டெல்லி செல்கிறேன் முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 8 Sep 2020 8:21 PM GMT (Updated: 8 Sep 2020 8:21 PM GMT)

அதிக வெள்ள நிவாரண நிதி பெற விரைவில் டெல்லி செல்வதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு கர்நாடகம் வந்துள்ளது. அந்த அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து சென்று மழையால் பாதித்த மாவட்டங்களில் ஆய்வு பணியை தொடங்கியுள்ளனர். அவர்கள் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) என்னை நேரில் சந்தித்து பேசினர். அப்போது வெள்ள பாதிப்புகள் குறித்து நான் விரிவாக அவர்களிடம் எடுத்துக் கூறியுள்ளேன். அந்த குழுவினர் நாளை (இன்று) தங்களின் ஆய்வு பணியை முடித்துக் கொண்டு தலைமை செயலாளரை நேரில் சந்திக்க உள்ளனர்.

அந்த குழுவினர் தங்களின் ஆய்வு அறிக்கையை மத்திய அரசிடம் வழங்குவதை நான் எதிர்நோக்கியுள்ளேன். நானும் விரைவில் செல்ல உள்ளேன். அப்போது வெள்ள பாதிப்புகளுக்கு அதிக நிதி உதவி வழங்குமாறு மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளேன். டெல்லி பயண தேதி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. மந்திரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினேன். வருகிற சட்டசபை கூட்டத்தில் பேச வேண்டிய விஷயங்கள் குறித்து விவாதித்தேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மந்திரிசபை விரிவாக்கம்

எடியூரப்பா டெல்லி பயணத்தின்போது, மந்திரிசபை விரிவாக்கம் குறித்து கட்சி மேலிட தலைவர்களுடன் விவாதிக்க உள்ளார். இதற்கு அனுமதியை அவர் பெறுவார் என்று கூறப்படுகிறது. மந்திரி பதவியை எதிர்நோக்கி எச்.விஸ்வநாத், ஆர்.சங்கர், எம்.டி.பி.நாகராஜ் ஆகியோர் காத்திருக்கிறார்கள். 34 உறுப்பினர்களை கொண்ட மந்திரிசபையில் தற்போது 28 பேர் உள்ளனர். இன்னும் 6 இடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக 20 பேர் மரணம் அடைந்துள்ளனர். 10 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 4.03 லட்சம் ஹெக்டேர் விவசாய பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. 14 ஆயிரத்து 182 கிலோ மீட்டர் சாலைகள் பழுதாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story