கொரோனா பரவலை கட்டுப்படுத்த உள்ளூர் ஊரடங்கு பலன் தருமா?


கொரோனா பரவலை கட்டுப்படுத்த உள்ளூர் ஊரடங்கு பலன் தருமா?
x
தினத்தந்தி 9 Sept 2020 2:59 AM IST (Updated: 9 Sept 2020 2:59 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் தற்போதைய உள்ளூர் ஊரடங்கு பலன்தருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதுச்சேரி,

புதுவையில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்த நிலையில் ஆய்வு செய்த மத்தியக்குழு கொரோனா பாதிப்பு அதிகம் கண்டறியப்படும் பகுதிகளில் உள்ளூர் ஊரடங்கினை அமல்படுத்த அறிவுறுத்தியது. அதன்படி புதுவையில் 6 ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 11 தெருக்களில் தொற்று பரவல் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டது.

அதாவது மேட்டுப்பாளையம் மங்கலட்சுமி நகர் 5-வது குறுக்கு தெரு, சண்முகாபுரம் அண்ணா வீதி, வீமன்நகர் ஓடைவீதி, முதலியார்பேட்டை வெள்ளாழர் வீதி 2-வது குறுக்கு தெரு, விடுதலை நகர் ஜி-பிளாக், உருளையன்பேட்டை செங்குந்தர் வீதி, ஒதியஞ்சாலை புதுநகர் மெயின்ரோடு, லாஸ்பேட்டை அசோக் நகர் பாரதிதாசன் வீதி, கிருஷ்ணாநகர் 14-வது குறுக்கு தெரு, கோரிமேடு ஜிப்மர் ஜி-டைப் குடியிருப்பு, பூமியான்பேட்டை பாவாணர் நகர் ஆகிய பகுதிகளில் தொற்று அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டது.

ஊரடங்கு அமல்

இதைத்தொடர்ந்து இந்த வீதிகளுக்கு மட்டும் உள்ளூர் ஊரடங்கினை கலெக்டர் அருண் நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த உத்தரவு நேற்று முதல் உடனே அமலுக்கு வந்தது. வருகிற 14-ந்தேதி வரை இது அமலில் இருக்கும்.

இந்த உத்தரவின்படி அந்த பகுதியில் உள்ள கடைகள், தொழிற்சாலைகள், தனியார் அலுவலகங்கள் மூடப்பட வேண்டும். காய்கறி மற்றும் மளிகை கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் பகல் 12 மணிவரை செயல்படலாம். அத்தியாவசியப் பணிகளுக்கு தவிர மற்ற பணிகளுக்கு போக்குவரத்து அனுமதிக்கப்படாது.

தடுப்புகள் இல்லை

ஆனால் உள்ளூர் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று தடுப்புகள் ஏதும் அமைக்கப்படவில்லை. வழக்கத்தைப்போலவே இந்த பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இருந்தது. ஒரு சில போலீசார் மட்டும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒரு தெரு பகுதி மட்டும் என்பதால் அங்கிருந்த ஒன்றிரண்டு கடைகள் பிற்பகலில் மூடப்பட்டன. ஒருசில இடங்களில் மட்டும் மாலைக்கு மேல் தடுப்புகள் அமைக்கப்பட்டது.

இந்த பகுதிகளில் சுகாதார பணியாளர்கள் வீடுவீடாக சென்று அங்கு வசிப்பவர்களுக்கு காய்ச்சல், சளி போன்ற கொரோனா அறிகுறிகள் உள்ளனவா? என்பது குறித்த விவரங்களை சேகரித்தனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பகுதிகள் மற்ற பகுதிகளில் இருந்து எந்த வகையிலும் தனிமைப்படுத்தப்பட்டு காட்டப்படவில்லை.

பலன் தருமா?

அந்த பகுதியில் வசிக்கும் மக்களும் இந்த ஊரடங்கினை பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை. இதனால் இந்த ஊரடங்கு எதிர்பார்த்த பலனை தருமா? என்பதும் தெரியவில்லை.

புதுவையில் ஏற்கனவே கடந்த வாரம் 32 பகுதிகளில் உள்ளூர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story