வருகிற 14-ந்தேதி முதல் சென்னைக்கு கூடுதலாக 4 டி.எம்.சி. கிருஷ்ணா நதிநீர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்


வருகிற 14-ந்தேதி முதல் சென்னைக்கு கூடுதலாக 4 டி.எம்.சி. கிருஷ்ணா நதிநீர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
x
தினத்தந்தி 9 Sept 2020 3:23 AM IST (Updated: 9 Sept 2020 3:23 AM IST)
t-max-icont-min-icon

சென்னை நீர்த்தேக்கங்களுக்கு கூடுதலாக 4 டி.எம்.சி. கிருஷ்ணா நதிநீரை வருகிற 14-ந்தேதி முதல் ஆந்திர அரசு வழங்குகிறது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

சென்னை,

கொரோனா வைரஸ் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் சென்னை தலைமைசெயலகத்தில் நடந்தது. இதில் நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அரசு கூடுதல் தலைமைசெயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைசெயலாளர் ஹர்மந்தர்சிங், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

சென்னை நகருக்கு நீர் வழங்கும் நீர்த்தேக்கங்கள் 2019-ம் ஆண்டு முழுமையாக வறண்டநிலையில் இருந்ததால், முதல்-அமைச்சர், ஆந்திர முதல்-மந்திரியை, தெலுங்கு கங்கை திட்டத்தில் இருந்து 8 டி.எம்.சி. தண்ணீர் வழங்குமாறு கடந்த 7.8.2019 அன்று கேட்டுக்கொண்டார். ஆந்திர முதல்-மந்திரி கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் வழங்க ஒப்புதல் வழங்கியதன்பேரில் கண்டலேறு பூண்டி கால்வாய் மூலம் கடந்த 25.9.2019 அன்று நீர் திறந்து விடப்பட்டு கடந்த 28.9.2019 அன்று பூண்டி நீர்த்தேக்கத்தை வந்தடைந்தது.

கடந்த 28.9.2019 முதல் 25.6.2020 வரை 8.06 டி.எம்.சி கிருஷ்ணா நதிநீர் பெறப்பட்டு உள்ளது. மேலும் கூடுதலாக, 4 டி.எம்.சி. கிருஷ்ணா நீரை வருகிற 14-ந்தேதி முதல் வழங்கவும் ஆந்திர அரசு உறுதியளித்து உள்ளது.

தடையின்றி குடிநீர் வினியோகம்

தற்போது சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்களான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி நீரும், வீராணம் ஏரியில் 1,465 மில்லியன் கன அடி நீரும் இருப்பு இருக்கிறது. மேற்கண்ட நீர் ஆதாரங்களில் உள்ள நீர் கொள்ளளவை கணக்கில் கொண்டு கடந்த 7.5.2020 முதல் சென்னைக்கு குடிநீர் வினியோகம் நாளொன்றுக்கு 650 மில்லியன் லிட்டர் என்ற அளவில் இருந்து 700 மில்லியன் லிட்டராக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த அளவிலேயே, வருகிற 2021-ம் ஆண்டு மே மாதம் வரை எவ்வித தடையும் இன்றி வழங்கப்படும். கடந்த வருடத்தின் ஆகஸ்டு மாதத்துடன் ஒப்பிடும்போது சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் சராசரியாக 6 அடி வரை உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story