திருப்பத்தூரில் டி.வி. கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த 11 பேர் கைது ரூ.9½ லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு


திருப்பத்தூரில் டி.வி. கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த 11 பேர் கைது ரூ.9½ லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு
x
தினத்தந்தி 9 Sept 2020 5:30 AM IST (Updated: 9 Sept 2020 5:02 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் டி.வி. கடை பூட்டை உடைத்து செல்போன்கள், லேப்டாப் பணம் கொள்ளையடித்த 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் தூய நெஞ்சக் கல்லூரி வணிக வளாகத்தில் கடந்த 3-ந் தேதி இரவு மர்ம நபர்கள் பிரபல டி.வி. கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த முன்னணி நிறுவன செல்போன்கள் மற்றும் லேப்டாப், டேப்லெட் ரூ.1 லட்சம் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றனர்,

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் பேபி, சப்-இன்ஸ்பெக்டர் அருளானந்தம் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளை கும்பலை தேடி வந்தனர். மேலும் கொள்ளை நடந்த கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி இருந்தது. ஆனால் தெளிவாக தெரியவில்லை. இதையடுத்து திருட்டு போன செல்போன்களில் ஐ.எம்.ஐ. எண்கள் மூலம் விசாரணையை தொடங்கினர்.

இதில் ஒரு சில செல்போன்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது தெரிந்தது. இதன்மூலம் கொள்ளை கும்பல் போலீசாரிடம் சிக்கியது. அதன்படி திருப்பத்தூர், பாய்ச்சல், மல்லாண்டியூர், மிட்டுர் தாமலேரிமுத்தூர் பகுதிகளைச் சேர்ந்த சதீஷ், மாதேஷ், ராகவேந்திரன், வீரமணி, விஸ்வா, விக்ரம், சுதாகர், குணா, விஸ்வானதன், கோவிந்தராஜ், நித்தியானந்தன் ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் டவுன் போலீஸ் நிலையத்திற்கு வந்து மீட்கப்பட்ட செல்போன்கள், ரொக்கப் பணம் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பத்தூர் டி.வி. ஷோரூம் மற்றும் ஜோலார்பேட்டை செல்போன் கடை, டாஸ்மாக் கடை ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் கும்பலாக வந்து கடையை உடைப்பது உள்ளே சென்று திருடுவது யாராவது வருகிறார்களா என கண்காணிப்பது என அனைத்து திருட்டிலும் ஒவ்வொருவருக்கும் சம்பந்தம் உள்ளது. கொள்ளை கும்பலிடம் இருந்து ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 40 செல்போன்கள், ரூ.1 லட்சம் மீட்கப்பட்டது.

திருட்டு வழக்கில் குற்றவாளிகளை பிடித்த துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் உள்பட தனிப்படையினர் 15 பேருக்கு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் வெகுமதிகளை வழங்கி பாராட்டினார்.

Next Story