கர்நாடகத்தில் இருந்து நெல்லைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.37½ லட்சம் கஞ்சா, குட்கா பறிமுதல் 2 பேர் கைது


கர்நாடகத்தில் இருந்து நெல்லைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.37½ லட்சம் கஞ்சா, குட்கா பறிமுதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 Sep 2020 11:46 PM GMT (Updated: 8 Sep 2020 11:46 PM GMT)

கர்நாடகத்தில் இருந்து நெல்லைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.37½ லட்சம் மதிப்புள்ள கஞ்சா, குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை,

நெல்லை தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் தலைமையில் போலீஸ் தனிப்படையினர் கரையிருப்பு சோதனை சாவடியில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

அந்த லாரிகளில் மூட்டைகளிலும், அட்டை பெட்டிகளிலும் கஞ்சா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 5 ஆயிரத்து 876 கிலோ கஞ்சா, குட்கா போன்ற புகையிலை பொருட் கள் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.37 லட்சத்து 36 ஆயிரம் ஆகும். இந்த லாரிகளுக்கு பாதுகாப்பாக அவற்றுக்கு முன்பு ஒரு காரும் அணிவகுத்து வந்தது தெரியவந்தது. அந்த காரையும் போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

2 பேர் கைது

இதையடுத்து காரில் வந்த கரையிருப்பை சேர்ந்த வேல்முருகன் மற்றும் ஒரு லாரியை ஓட்டி வந்த கரையிருப்பை சேர்ந்த ராமச்சந்திரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மற்றொரு லாரியை ஓட்டி வந்தவர் வேல்முருகனின் தம்பி சுப்பிரமணியன் என்பதும், அவருடன் வந்தது தாழையூத்தை சேர்ந்த குமார் என்பதும் தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

2 லாரிகள்-கார் பறிமுதல்

இதுகுறித்து நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணன் கூறியதாவது:-

கர்நாடகா மாநிலத்தில் இருந்து நெல்லைக்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கரையிருப்பு சோதனை சாவடியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது கஞ்சா, குட்கா கடத்தி வரப்பட்ட 2 லாரிகளும், அந்த லாரிகளுக்கு பாதுகாப்பாக வந்த ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 2 பேரை தேடி வருகிறோம்.

புகையிலை இல்லாத நெல்லையை உருவாக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் நெல்லை மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை நடமாட்டம், புழக்கம் குறித்து கண்காணித்து தடுப்பு நடவடிக்கை எடுப்பார்கள். தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி, புகையிலை பொருட்கள் கடத்தலை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஒரு வாரமாக புகையிலையை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை தொடரும்.

குண்டர் சட்டம்

கடந்த ஆண்டில் கஞ்சா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 90 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் 9 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். நடப்பாண்டில் மேலும் 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது டவுன் போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார், தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story