தென்காசியில் 100 பவுன் நகை திருட்டு வழக்கு: கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு


தென்காசியில் 100 பவுன் நகை திருட்டு வழக்கு: கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
x
தினத்தந்தி 9 Sept 2020 5:23 AM IST (Updated: 9 Sept 2020 5:23 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் தொழில் அதிபரின் மனைவியை கட்டிப்போட்டு 100 பவுன் நகையை திருடிய 2 கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

தென்காசி,

தென்காசியில் இருந்து நெல்லை செல்லும் மெயின் ரோட்டில் சம்பா தெருவில் உள்ள தொழில் அதிபர் ஜெயபால் வீட்டில் நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு 2 மர்ம நபர்கள் புகுந்து 100 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

அவர்கள் நகைகளை கொள்ளை அடிக்கும் முன்பு ஜெயபாலின் மனைவி விஜயலட்சுமியை செல்லோ டேப் மூலம் கைகளை கட்டி கத்தியை காட்டி மிரட்டி ஒரு அறையில் அடைத்து விட்டு இந்த கைவரிசையில் ஈடுபட்டனர். இருவரில் ஒருவன் தலைக் கவசம் அணிந்தும், மற்றொருவன் பர்தா அணிந்தும் இருந்தான் என்று விஜயலட்சுமி போலீசாரிடம் தெரிவித்தார்.

3 தனிப்படை

அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கொள்ளை சம்பவம் குறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் உத்தரவின்பேரில், துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாதவன், முத்து கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த தனிப்படை போலீசார் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அந்த நேரத்தில் ஒரு லாரியை நம்பர் பிளேட் இல்லாத ஒரு மோட்டார்சைக்கிள் முந்தி செல்வது பதிவாகி இருந்தது. அந்த மோட்டார்சைக்கிளில் ஒருவர் தலைக் கவசம் அணிந்தும், பின்புறம் பர்தா அணிந்த ஒருவரும் சென்றனர். அந்த மோட்டார்சைக்கிள் நெல்லை மெயின் ரோட்டில் அந்த வீட்டின் கிழக்கு பகுதியில் இருந்து வந்து மேற்கு பகுதி வழியாக சென்றிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. பின்புறமிருந்த பர்தா அணிந்தவர், பெண்கள் இருப்பது போன்று ஒரு புறமாக அமர்ந்து சென்று உள்ளார்.

தம்பதிபோல் வந்து கைவரிசை

ஆணாக இருந்தால் மோட்டார் சைக்கிள் பின் இருக்கையில் இரு புறமும் கால்களை போட்டு அமர்ந்திருக்க வேண்டும் என்றும், கிழக்கு பகுதியில் இருந்து வந்ததால் அங்கு ஏதாவது பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் போட்டு இருக்கலாம் என்றும், வேறு ஏதாவது ஊர்களில் இருந்து வந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கொள்ளையர்கள் தம்பதிபோல் வந்து கைவரிசையை காட்டிச் சென்றுள்ளனர். கண்காணிப்பு கேமராவில் சிக்கிய அவர்கள் 2 பேரும் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், மோட்டார்சைக்கிளின் பின்புறம் இருந்தவர் திருநங்கையாக இருக்கலாமோ? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story