கரூரில் மின்சாரம் பாய்ந்து கேபிள் ஊழியர் பலி - இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல்


கரூரில் மின்சாரம் பாய்ந்து கேபிள் ஊழியர் பலி - இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 9 Sept 2020 11:48 AM IST (Updated: 9 Sept 2020 11:48 AM IST)
t-max-icont-min-icon

கரூரில், மின்சாரம் பாய்ந்து கேபிள் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கரூர்,

கரூர் வெங்கமேடு பழனியப்பா நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 34). இவர், அதே பகுதியை சேர்ந்த கேபிள் ஆபரேட்டர் ஒருவரிடம் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை இவர் தன்னுடன் பணியாற்றும் சக ஊழியர்களுடன் இணைந்து திட்டச்சாலை பகுதியில் கேபிள் வயரை இழுத்துக் கொண்டிருந்தார்.

அவர் 3 மாடி கட்டிடத்தின் மேல் நின்று வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது கேபிள் வயர் உயர் அழுத்த மின் கம்பி மீது உரசியது. இதில் பழனிச்சாமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தநிலையில், உயிரிழந்த பழனிச்சாமி குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். கேபிள் டி.வி. உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர்-திருச்சி சாலையில் காந்தி கிராமம் பகுதியில் சாலையில் அமர்ந்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் பசுபதிபாளையம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story