நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தி.மு.க. இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம்


நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தி.மு.க. இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Sept 2020 5:15 PM IST (Updated: 9 Sept 2020 5:13 PM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி, தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாமக்கல், 

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டத்திலும் தி.மு.க.வினர் தங்களின் வீடுகளின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் அய்யம்பாளையம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகர இளைஞர் அணி அமைப்பாளர் சதீஸ் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நந்தகுமார் முன்னிலை வகித்தார். இதில் நகர துணை அமைப்பாளர்கள் கோபி கிருஷ்ணன், வினோத்குமார், அரவிந்த், பிரபாகரன், சிலம்பரசன், தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் நகரில் 39 வார்டுகளிலும் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த கோரியும் திருச்செங்கோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதுரா செந்தில், மாணவரணி அமைப்பாளர் ஜிஜேந்திரன், திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேலு, நகர செயலாளர் கார்த்திகேயன், நகர இளைஞரணி அமைப்பாளர் சசிகுமார், துணை அமைப்பாளர் செங்கோட்டுவேலு, மாணவரணி கோபி, கவின்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் தி.மு.க. இளைஞரணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மோகன்தாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மதிவேந்தன், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வி.பாலு, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், ராசிபுரம் நகர மாணவர் அணி துணை அமைப்பாளர் நைனாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்புக்கொடி ஏந்தி இருந்தனர். மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

அதேபோல் கூனவேலம்பட்டி ஊராட்சியில் ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் கட்சியின் ராசிபுரம் ஒன்றிய செயலாளர் கே.பி.ஜெகநாதன் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட பிரதிநிதி சரவணன், கிளை செயலாளர்கள் பூபதி, ஜெய் கணேஷ், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சிவசேகரன், கிளை பிரதிநிதிகள் பாலு, மெய்யழகன், மற்றும் பெ.சக்திவேல், மோகன்ராஜ், அ.சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

வெண்ணந்தூர் ஒன்றியம் அத்தனூரில் இதே கோரிக்கையை வலியுறுத்தி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் கட்சியின் பேரூர் பொறுப்பாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார் மற்றும் துணை அமைப்பாளர் அருள்பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story