பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டை கண்டித்து நாகை கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் - விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்றது
பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்து நாகை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காவிரி விவசாயிகள் சங்க மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் விவசாயிகள் ஒன்று கூடினர். தொடர்ந்து அவர் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதை அறிந்த போலீசார் கலெக்டர் அலுவலகம் முன்பு குவிந்தனர். மேலும் போராட்டம் நடைபெற்ற பகுதியில் போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டு தொகை காவிரி டெல்டா மாவட்டங்களில் விடுபட்ட 916 வருவாய் கிராமங்களுக்கு வழங்கவேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு தொகை வழங்காமல் மோசடியில் ஈடுபட்ட வேளாண்மை பயிர்க்காப்பீடு நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து இழப்பீட்டு தொகையை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதன்பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.
பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட உருவாக்க சிறப்பு அதிகாரி அலுவலகம் முன்பு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் வைத்தியநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் விசுவநாதன், பொருளாளர் பன்னீர்செல்வம், சீர்காழி ஒன்றிய செயலாளர் செந்தில் முருகன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் நெடுமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், வேளாண் காப்பீட்டு நிறுவனம் மாவட்டத்திலுள்ள 515 வருவாய் கிராமத்தில் 147 கிராமத்துக்கு மட்டும் தொகையை வழங்கியுள்ளது. மீதி உள்ள வருவாய் கிராமங்களுக்கும் வழங்கப்படாமல் ரூ. 250 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளதாகவும், அதன் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, பாரபட்சமாக செயல்பட்டு ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட வேளாண் காப்பீட்டு நிறுவன அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அதிகாரி லலிதாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
நாகை அருகே ஐவநல்லூரில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில நிர்வாக குழு உறுப்பினர் சரபோஜி தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் நாகரத்தினம் முன்னிலை வகித்தார். நடப்பாண்டிற்கான விவசாய கடனை உடனே வழங்க வேண்டும். 2019-2020-ம் ஆண்டுக்குரிய பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை டெல்டா மாவட்டத்தில் கொண்டு வரக்கூடாது. விவசாயிகளை வஞ்சிக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாதர் சங்க சம்மேளன நாகை ஒன்றிய தலைவர் சரோஜினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story