விடுபட்ட 916 கிராமங்களுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத்தொகை வழங்க வலியுறுத்தி - தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
விடுபட்ட 916 கிராமங்களுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத்தொகை வழங்க வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர்,
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் அருகே இருந்து பேரணியாக புறப்பட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மணி தலைமை தாங்கினார்.
மண்டல தலைவர் அண்ணாதுரை, மாவட்ட தலைவர் துரை.பாஸ்கரன், ஆலோசகர் பழனியப்பன், மாநில இணை அமைப்பாளர் அறிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை மாநில தலைவர் புண்ணியமூர்த்தி தொடங்கி வைத்தார்.
போராட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் விடுபட்ட 916 வருவாய் கிராமங்களுக்கு 2019-2020-ம் ஆண்டு பயிர் காப்பீட்டிற்கான இழப்பீட்டுத்தொகையை உடனே வழங்க வேண்டும். தன்னிச்சை போக்குடன் பாரபட்சமாக செயல்பட்டு ஊழல் முறைகேட்டில் ஈடுபடும் வேளாண் காப்பீட்டு நிறுவன அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆண்டு தோறும் அறுவடை ஆய்வறிக்கையை கலெக்டர்கள் ஒப்புதல் பெற்று இழப்பீடு இறுதி செய்வதை நடைமுறைப்படுத்த வேண்டும். பல ஆண்டுகளாக ஒரே பகுதியில் பணிபுரியும் வேளாண் உதவி அலுவலர்களை பணி மாறுதல் செய்து ஊழல் முறைகேடுகளுக்கும், பாகுபாடுகளுக்கும் இடமின்றி வேளாண்துறை நலத்திட்டங்கள் விவசாயிகளுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் நிபந்தனைஇன்றி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் கலெக்டர் அலுவலக வாசலில் நின்று கோஷங்கள் எழுப்பினர். பின்னர் முக்கிய நிர்வாகிகள் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் கலெக்டர் கோவிந்தராவை சந்தித்து மனு அளித்தனர்.
போராட்டத்தில் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் என 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். விவசாயிகள் போராட்டத்தையொட்டி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.
Related Tags :
Next Story