காவலாளியை தள்ளிவிட்டு முதல்-மந்திரியின் பண்ணை வீட்டில் நுழைய முயன்ற 3 பேர் கைது


காவலாளியை தள்ளிவிட்டு முதல்-மந்திரியின் பண்ணை வீட்டில் நுழைய முயன்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 Sept 2020 1:19 AM IST (Updated: 10 Sept 2020 1:19 AM IST)
t-max-icont-min-icon

காவலாளியை தள்ளிவிட்டு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் பண்ணை வீட்டில் நுழைய முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் வீடான ‘மாதோஸ்ரீ’ மும்பை பாந்திராவில் கலாநகர் பகுதியில் உள்ளது. கடந்த 6-ந்தேதி மர்மநபர் ஒருவர் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயுடன் பேச விரும்புவதாக கூறி அவரது வீட்டுக்கு 2 முறை போன் செய்தார்.

இந்த போன் அழைப்பால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 பேர் கைது

இந்தநிலையில் ராய்காட் மாவட்டம் அருகே உள்ள பிலாவாலி கிராமத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு சொந்தமாக பண்ணை வீடு ஒன்று உள்ளது. இந்த பண்ணை வீட்டின் அருகே நேற்று முன்தினம் மாலையில் 3 பேர் சுற்றித்திரிந்துள்ளனர். அப்போது, அவர்கள், கிராமவாசி ஒருவரிடம் முதல்-மந்திரியின் பண்ணை வீட்டிற்கு செல்வதற்காக முகவரியை விசாரித்து உள்ளனர்.

பின்னர் பண்ணை வீட்டின் முன்பு வந்த 3 பேரையும் அங்கிருந்த காவலாளி வழிமறித்து விசாரித்தார். அப்போது, அவர்கள் தங்களை பிரபல டி.வி. சேனல் நிருபர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டு உள்ளே நுழைய முயன்றனர்.

ஆனாலும் காவலாளி அவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து காவலாளியை கீழே தள்ளிவிட்டு விட்டு அங்கிருந்து தப்பிசென்றனர்.

இது பற்றி காவலாளி உடனடியாக காலாப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் அங்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த அவர்கள் 3 பேரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

பரபரப்பு

இவர்கள் என்ன காரணத்துக்காக முதல்-மந்திரியின் பண்ணை வீட்டுக்குள் நுழைய முயன்றனர் எனபது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் மாதோஸ்ரீ இல்லத்துக்கு தாவூத் இப்ராகிம் பெயரில் மர்ம டெலிபோன் அழைப்பு வந்த நிலையில், அவரது பண்ணை வீட்டுக்குள் 3 பேர் அத்துமீறி நுழைய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story