நெல்லை அருகே காரில் கடத்திய 22 கிலோ கஞ்சா பறிமுதல் 4 பேர் கைது


நெல்லை அருகே காரில் கடத்திய 22 கிலோ கஞ்சா பறிமுதல் 4 பேர் கைது
x
தினத்தந்தி 9 Sep 2020 11:14 PM GMT (Updated: 9 Sep 2020 11:14 PM GMT)

நெல்லை அருகே காரில் கடத்திய 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை,

வெளிமாநிலங்களில் இருந்து நெல்லை மாவட்டத்துக்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்படி, சேரன்மாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி தலைமையில் போலீசார், நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இதில், அந்த காரில் 22 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (வயது 21), வசவப்புரத்தைச் சேர்ந்த ஆறுமுககனி (25), பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சேர்ந்த தினேஷ் (22), நெல்லை கொக்கிரகுளத்தைச் சேர்ந்த பேராட்சி (21) என்பது தெரியவந்தது. இதுகுறித்து முன்னர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

22 கிலோ கஞ்சா பறிமுதல்

அவர்களிடம் இருந்த 22 கிலோ கஞ்சா, ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக சென்னல்பட்டியைச் சேர்ந்த மகேஷ், முத்துப்பாண்டி, பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தைச் சேர்ந்த சுந்தர் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுகுறித்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறும்போது, ‘ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வாகன சோதனையை தீவிரப்படுத்தினோம். தற்போது 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 4 பேரை கைது செய்து இருக்கிறோம். இந்த கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? எந்த ஊர்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்று விசாரணை நடத்தி வருகிறோம். முழு விவரம் கிடைத்தவுடன், சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள். இதுபோன்ற தகவல்கள் பொதுமக்களுக்கு தெரிந்தால் போலீசாருக்கு தெரிவிக்கலாம்’ என்றார்.

Next Story