முகநூல் மூலம் ஆபாசமாக பேசி வாலிபர் கடத்தல் வழக்கு: இளம்பெண்ணின் வருங்கால கணவர், என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கைது தனிப்படை போலீசார் நடவடிக்கை


முகநூல் மூலம் ஆபாசமாக பேசி வாலிபர் கடத்தல் வழக்கு: இளம்பெண்ணின் வருங்கால கணவர், என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கைது தனிப்படை போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 10 Sept 2020 9:00 AM IST (Updated: 10 Sept 2020 6:28 AM IST)
t-max-icont-min-icon

முகநூல் மூலம் ஆபாசமாக பேச வைத்து வாலிபரை கடத்தி சித்ரவதை செய்த வழக்கில் இளம்பெண்ணின் வருங்கால கணவர் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டனர்.

கே.கே.நகர்,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அங்கு செட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் குமார் (வயது 31) . முகநூல் மூலம் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருச்சி காஜாமலையை சேர்ந்த நசீர் அகமது என்பவரின் மகள் ரகமத்நிஷா (20) என்ற பி.எஸ்சி 3-ம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. ரகமத் நிஷாவுக்கும், காஜாமலையை சேர்ந்த அன்சாரி ராஜா (22) என்ற வாலிபருக்கும் கடந்த 3-ந் தேதி திருமணம் நிச்சயம் ஆகி உள்ளது. அன்சாரி ராஜா, டிப்ளமோ என்ஜினீயரிங் முடித்து விட்டு, ரகமத்நிஷா மற்றும் கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து முகநூல் மூலம் நட்பாக பழகி பணம் பறிக்கும் செயலில் அவர் ஈடுபட்டு வந்தார்.

அதன்படி ரகமத்நிஷா, கடலூரை சேர்ந்த வினோத்குமாருக்கு ஆசைவார்த்தைகளையும், ஆபாசமான வார்த்தைகளையும் முகநூலில் பதிவிட்டு தனது வலையில் விழச்செய்துள்ளார்.

கடந்த 5-ந் தேதி ரகமத்நிஷாவை சந்திக்கும் ஆசையில் வினோத்குமார் தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி வந்தார். திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானம் இருக்கும் இடத்திற்கு அவர் வந்தபோது, 7 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவில் கடத்தி சென்று ரூ.1 லட்சம் கேட்டு சித்ரவதை செய்து, அவரது மோட்டார் சைக்கிளை பறித்து கொண்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து ரகமத்நிஷா, கூட்டாளிகள் ஆசீக் என்ற நிவாஷ் (26) மற்றும் திருச்சி பாலக்கரை கீழபடையாச்சி தெருவை சேர்ந்த முகமது யாசர் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவான ரகமத்நிஷாவின் வருங்கால கணவரான அன்சாரி ராஜா உள்ளிட்ட 5 பேரை பிடிக்க இன்ஸ்பெக்டர் நிக்சன் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் விசாரணை நடத்தி, 5 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அன்சாரி ராஜா மற்றும் காஜாமலை பி.வி.எஸ். நகரை சேர்ந்த காஜாமைதீன் மகன் அன்சாரி பிலால் (20) ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்களில் அன்சாரி பிலால், திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கைதான 2 பேரும் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story