வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வெளியூர் பக்தர்கள் வரத்தொடங்கினர் - கடற்கரைக்கு செல்ல அனுமதி இல்லை
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வெளியூர் பக்தர்கள் வரத்தொடங்கினர். பக்தர்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும் சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் இந்த பேராலயம் திகழ்கிறது. பல்வேறு சிறப்புகளை பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை நடைபெற்றது.
தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு விழாவில் வெளியூர் பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படவில்லை. வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பக்தர்கள் மட்டும் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து வேளாங்கண்ணி பகுதியில் உள்ள பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பேராலய விழாவில் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது.
இதைத்தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து வழிபட பேராலய நிர்வாகம் அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து சென்னை, கோவா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வர தொடங்கி உள்ளனர். கைகளை கிருமி நாசினியால் சுத்தம் செய்த பிறகே பக்தர்கள் வேளாங்கண்ணி பேராலயத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து மாதாவை தரிசனம் செய்தனர். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தை சுற்றி சுமார் 400-க்கும் அதிகமான கடைகள் உள்ளன. இதில் ஓட்டல்கள், பேன்சி ஸ்டோர்ஸ், முடி இறக்கி காணிக்கை செலுத்தும் சலூன்கள் போன்றவை அடங்கும். இதில் பாதி அளவு கடைகள் திறந்து இருந்தன. ஓட்டல்களில் விற்பனை குறைவாக இருந்தது. வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி உள்ள தங்கும் விடுதிகளில் ஒரு சில விடுதிகள் திறக்கப்பட்டு இருந்தன.
Related Tags :
Next Story