சிங்கம்புணரி அருகே, தாயிடம் நகை பறித்த கொள்ளையனை சண்டையிட்டு பிடித்த புதுமாப்பிள்ளை
தாயிடம் நகை பறித்துவிட்டு தப்பிய கொள்ளையனை விரட்டிச்சென்று, கட்டிப்புரண்டு சண்டையிட்டு புதுமாப்பிள்ளை பிடித்தார்.
சிங்கம்புணரி,
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வேங்கைபட்டி புதுவயல் பகுதியில் வசித்து வருபவர் குமரேசன் (வயது 52). இவரது மனைவி காந்திமதி. இவர்கள் சிங்கம்புணரி செல்லும் சாலை அருகே வயல் பகுதியில் புதிதாக வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
கடந்த 10 நாட்களுக்குமுன் குமரேசன் மகன் தினேஷ்குமாருக்கு திருமணம் நடைபெற்றது. மகன், மருமகளும் அந்த வீட்டில் தங்கி இருந்தனர். நேற்று முன்தினம் இரவு வீட்டு முன்பு கட்டிலில் குமரேசன் தூங்கி உள்ளார். இதையடுத்து அவருடைய மனைவி காந்திமதி கதவை பூட்டாமல் ஹாலில் படுத்திருந்தார்.
நள்ளிரவு 2 மணி அளவில் அவர்களது வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் 2 பேர், காந்திமதியின் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்துள்ளனர்.
இதையடுத்து திடுக்கிட்டு எழுந்த அவர் அலறி உள்ளார். உடனே பக்கத்து அறையில் தூங்கிக்கொண்டிருந்த தினேஷ்குமார் ஓடி வந்தார். அவரை பார்த்த கொள்ளையர்கள் தப்பி ஓடினர். அவர்களை விரட்டிச் சென்ற தினேஷ்குமார், கொள்ளையன் ஒருவனை மடக்கி பிடித்தார். அப்போது அவருடன் கொள்ளையன் கட்டிப்புரண்டு சண்டையிட்டு தப்பிக்க முயன்றான்.
இந்நிலையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட ஏட்டு கார்த்திக் பிரபு தலைமையிலான போலீசார் புதுவயல் பகுதிக்கு வந்தனர். அவர்கள் தினேஷ்குமாருடன் சண்டையிட்ட கொள்ளையனை பிடித்தனர். அவனிடம் இருந்து 10 பவுன் நகைகள், இரும்பு கம்பி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தப்பிச்சென்ற மற்றொரு கொள்ளையனை சிங்கம்புணரி பஸ் நிலைய பகுதியில் போலீசார் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தைச் சேர்ந்த வடிவேல் (39), சுப்பிரமணியன் (50) என்பது தெரியவந்தது. இதுகுறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story