‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: ஆர்.எஸ்.மங்கலத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மீண்டும் தொடக்கம்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக ஆர்.எஸ்.மங்கலத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டு ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுவட்டார ஏழை, எளிய மக்களுக்கு சிறப்பாக சேவை ஆற்றியது. இந்த நிலையில் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வட்டார மருத்துவ அலுவலர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இங்கு செயல்பட்டு வந்த ஆம்புலன்ஸ் வாகனம் அருகே உள்ள நயினார்கோவிலுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இதனால் கடந்த 10 ஆண்டுக்கு மேலாக இந்த பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் சேவை இல்லாமல் விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்ல திருவாடானை, நயினார்கோவில், பரமக்குடியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைக்க வேண்டியநிலை இருந்தது. இதனால் உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காததால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் உயிர்பலி ஏற்பட்டு வந்தது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்தனர்.
இதுகுறித்து ‘தினத்தந்தி’யில் சுட்டிக்காட்டப்பட்டது. இதன் எதிரொலியாக ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மையமாக கொண்டு நேற்று முதல் மீண்டும் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. ஆர்.எஸ்.மங்கலம் மருத்துவமனையில் நிறுத்தப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் வாகனம் விபத்து மற்றும் நோயாளிகளை ஏற்றி செல்வதற்கு மட்டும் பயன்படுத்தப்படும் எனவும் கொரோனா தொற்று நோயாளிகளை ஏற்றுவதற்கு தனி ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story