ஆத்தூர் அருகே நர்சு கொலை வழக்கில் தந்தை-மகன் கைது பரபரப்பு வாக்குமூலம்


ஆத்தூர் அருகே நர்சு கொலை வழக்கில் தந்தை-மகன் கைது பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 10 Sept 2020 11:33 PM IST (Updated: 10 Sept 2020 11:33 PM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே நடந்த நர்சு கொலை வழக்கில் தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

ஆறுமுகநேரி,

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முக்காணி வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகள் கனகா (வயது 25). ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 6 மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை. முருகேசனுக்கும், அவரது அக்காள் மீனாவின் கணவர் தங்கராஜிக்கும் இடையே இடம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

நேற்று முன்தினம் காலை வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த கனகாவை தங்கராஜின் மகன் மாரியப்பன் (28) கத்தியால் குத்திக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தந்தை-மகன் கைது

பின்னர் இந்த கொலை தொடர்பாக தங்கராஜ், அவருடைய மகன் மாரியப்பன் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் பழையகாயல் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு பழைய காயலுக்கு சென்று தங்கராஜ், மாரியப்பன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

பரபரப்பு வாக்குமூலம்

கைதான மாரியப்பன் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

என்னுடைய தந்தைக்கும், மாமா முருகேசனுக்கும் இடையே நீண்ட காலமாக இடத்தகராறு இருந்து வந்தது. இதில் முருகேசனுக்கு சாதகமாக கோர்ட்டு தீர்ப்பு வந்தது. மேலும் எனது தந்தை மீது ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் முருகேசன் பலமுறை புகார் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், முருகேசனை தேடி வீட்டுக்கு சென்றேன். அப்போது அவரது மகள் கனகா வீட்டில் இருந்து வெளியே வந்தார்.

அவரிடம் முருகேசனை பற்றிக் கேட்டபோது, எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கனகாவை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றேன். இதில் அவர் இறந்து விட்டார். பின்னர் பழைய காயலில் பதுங்கி இருந்த என்னையும், எனது தந்தை தங்கராஜையும் போலீசார் கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், இந்த கொலை வழக்கு தொடர்பாக மாரியப்பனின் தாய் மீனாவை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story