கர்நாடகத்தில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா


கர்நாடகத்தில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 Sept 2020 2:12 AM IST (Updated: 11 Sept 2020 2:12 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க முன்களத்தில் நின்று பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறையினர், போலீஸ்காரர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுபோல மக்கள் பிரதிநிதிகளையும் கொரோனா விடாமல் தாக்கி வருகிறது.

மாநிலத்தில் ஏற்கனவே முதல்-மந்திரி எடியூரப்பா, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மந்திரிகள் சி.டி.ரவி, பி.சி.பட்டீல், ஆனந்த்சிங், ஸ்ரீராமுலு, எஸ்.டி.சோமசேகர், ஈசுவரப்பா, சசிகலா ஜோலே, சிவராம் ஹெப்பார் மற்றும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் என 60-க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

மந்திரி பிரபு சவானுக்கு கொரோனா

பீதர் மாவட்டம் அவுராத் தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் பிரபு சவான். பா.ஜனதா கட்சியை சேர்ந்த இவர் எடியூரப்பா தலைமையிலான மந்திரிசபையில் கால்நடை துறை மந்திரியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மந்திரி பிரபு சவானின் கார் டிரைவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. இதனால் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மந்திரி பிரபு சவான் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டார். இதில் மந்திரி பிரபு சவானுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதையடுத்து அவர் டாக்டர்களின் அறிவுரையின்படி வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுபோல மந்திரி பிரபு சவானுடன் தொடர்பில் இருந்த உறவினர், பாதுகாப்பு போலீஸ்காரர் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story