சென்னையில் பாஸ்போர்ட், ஆதார் அட்டை பெற்ற இலங்கை தம்பதி ‘கியூ’ பிரிவு போலீசார் விசாரணை


சென்னையில் பாஸ்போர்ட், ஆதார் அட்டை பெற்ற இலங்கை தம்பதி ‘கியூ’ பிரிவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 Sept 2020 3:45 AM IST (Updated: 11 Sept 2020 3:45 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட், ஆதார் அட்டை பெற்ற இலங்கையை சேர்ந்த தம்பதியர் சிக்கினர். அவர்களிடம் ‘கியூ’ பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

சென்னை,

சென்னை அண்ணாநகர் மேற்கு அன்பு காலனியில் வசித்து வரும் தனியார் காப்பீடு நிறுவன ஊழியர் தாஜூதீன் (வயது 55), அவரது மனைவி ஆஷா (60) ஆகியோர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் இந்திய அரசின் ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் உள்பட அரசு அங்கீகார அட்டைகள் பெற்று இருப்பதாகவும் மத்திய உளவுப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதுதொடர்பாக தமிழக ‘கியூ’ பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் 2 பேரிடம் ‘கியூ’ பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

சட்டவிரோத குடியேற்றம்

விசாரணையில், ‘தாஜூதீனும், ஆஷாவும் இலங்கை நாட்டில் இருந்து கடந்த 1987-ம் ஆண்டு தமிழகம் வந்து, நெல்லை மாவட்டத்தில் தங்கி இருந்ததும், பின்னர் 1998-ம் ஆண்டு அவர்கள் சென்னையில் குடியேறியதும், தற்போது அவர்களுடைய மகன் ஜூலியன் (33) பெங்களூருவில் இருப்பதும் தெரிய வந்தது.

இவர்கள் போலி ஆவணங்கள் மூலம் ஆதார் அட்டை, பாஸ்போர்ட் என அரசு அங்கீகார அட்டைகளை பெற்று சட்டவிரோதமாக தங்கி இருந்ததும் கண்டறியப்பட்டது.

கணவர் கைது

பின்னர் ‘கியூ’ பிரிவு போலீசார் அவர்கள் 2 பேரையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் இலங்கை தம்பதியிடம் தனியாக விசாரணை நடத்தினர்.

போலி ஆவணங்கள் தயாரித்தது எப்படி? இதற்கு யார் உடந்தையாக இருந்தார்கள்? என்ற கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் தாஜூதீன் கைது செய்யப்பட்டார். அவருடைய மனைவி ஆஷாவை மீண்டும் விசாரணைக்கு அழைக்கும் போது வரவேண்டும் என்று சொல்லி போலீசார் அனுப்பி வைத்ததாக தெரிகிறது.

Next Story