‘நீட்’ தேர்வு மன உளைச்சலில் தற்கொலை: மாணவர் விக்னேஷ் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் - பதற்றம்-போலீஸ் குவிப்பு
‘நீட்‘ தேர்வு மன உளைச்சலில் மாணவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
செந்துறை,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு விக்னேஷ் (வயது 19), வினோத் என 2 மகன்கள். இதில் விக்னேஷ் சிறுவயது முதலே டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவில் படித்து வந்தார்.
இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1,006 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். பின்னர் கேரளாவில் உள்ள பயிற்சி மையம் மற்றும் துறையூரில் உள்ள ஒரு நிறுவனம் ஆகியவற்றில் ‘நீட்‘ தேர்வுக்கு பயிற்சி பெற்றார். 2 முறை ‘நீட்‘ தேர்வு எழுதியதில் ஒருமுறை தோல்வியும், மற்றொரு முறை தேர்ச்சியும் பெற்றார். ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கு ‘சீட்‘ கிடைத்தும், அவரால் அதிக பணம் கொடுத்து சேர முடியவில்லை.
இந்நிலையில் 3-வது முறையாக ‘நீட்‘ தேர்வு எழுத தீவிரமாக படித்து வந்தார். நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ‘நீட்‘ தேர்வு எழுத இருந்தநிலையில், இந்த தேர்விலாவது அதிக மதிப்பெண் பெற்று டாக்டராக முடியுமா? என்று மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கிணற்றில் விக்னேஷ் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து கிராம மக்களும், பா.ம.க.வினரும் அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி விக்னேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு எலந்தங்குழி கிராமத்திற்கு வந்த திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராமன் மற்றும் திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் உறவினர்களிடம் கொட்டும் மழையில் விடிய, விடிய பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் விக்னேஷின் தற்கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும், 50 லட்சம் ரூபாய் நிதி வழங்க வேண்டும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், இதனை அரசு அறிவிக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பதற்றம் நீடிக்கவே, போலீசார் குவிக்கப்பட்டனர்.
2-வது நாளாக நேற்றும் உறவினர்கள், விக்னேசின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாநில துணை பொது செயலாளர் திருமாவளவன் தலைமையில் பா.ம.க.வினர், உறவினர்கள், கிராம மக்கள் உள்ளிட்டோர் விக்னேஷ் வீட்டின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
மேலும் விக்னேசின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை மற்றும் கடைவீதிகளில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர்தேஸ்முக் ஆகியோர் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, துணை சூப்பிரண்டு பாரதிதாசன், இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, முகமதுஇத்ரீஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அரியலூர் தவிர திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் பாதுகாப்பு பணிக்காக போலீசார் ஜெயங்கொண்டம் பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘மாணவர் விக்னேஷ் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.7 லட்சம் நிதியும் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து பா.ம.க.வினரும், உறவினர்களும் விக்னேசின் உடலை பெற சம்மதம் தெரிவித்தனர்.
பின்னர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் விக்னேஷின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவருடைய பெரியப்பா மகன் சக்திவேலுவிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவருடைய உடல் சொந்த ஊரான எலந்தங்குழி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு, அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அவருடைய உடல் அந்த பகுதியில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் அரியலூர் மாவட்ட மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story