வீட்டை இடிக்க எதிர்ப்பு: மாநகராட்சி கோட்ட அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற வாலிபர் - திருச்சியில் பரபரப்பு
வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து திருச்சி மாநகராட்சி கோட்ட அலுவலகம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி,
திருச்சி வயலூர்ரோடு உய்யகொண்டான் திருமலை அருகே சாந்திநிகேதன் அவென்யூதெருவை சேர்ந்தவர் அருள்தாஸ். இவருடைய மகன் அஜின்(வயது 27). இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை 10.15 மணி அளவில் அஜின் ஒரு பிளாஸ்டிக் பையில் மண்எண்ணெயை எடுத்துக்கொண்டு திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அலுவலகம் முன்பு திடீரென தனது தலையில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதைக்கண்டதும், அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த நுண்ணறிவுப்பிரிவு போலீஸ் ஏட்டு சங்கர் மற்றும் சில பத்திரிகையாளர்கள் பாய்ந்து சென்று அவர் கையில் வைத்திருந்த தீப்பெட்டியை பறித்தனர். பின்னர் அவரது தலையில் தண்ணீரை ஊற்றினர்.
இதுகுறித்து அஜின் நிருபர்களிடம் கூறுகையில், நாங்கள் உய்யகொண்டான் திருமலை பகுதியில் சுமார் 28 ஆண்டுகளாக குடும்பத்தோடு வசித்து வருகிறோம். தற்போது அந்த இடம் வேறு ஒருவரின் பெயரில் பட்டா இருப்பதாகவும், அங்கு பூங்கா கட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறி எங்களை காலி செய்ய மாநகராட்சியினர் வற்புறுத்தி வருகிறார்கள். கூலி வேலை செய்து பிழைத்து வரும் எங்களை திடீரென்று அப்புறப்படுத்தினால் எங்கு செல்ல முடியும். இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
சில நாட்களுக்கு முன்பு எனது தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்து இருந்தோம். அந்த சமயம் எங்களது வீட்டை இடிக்க நோட்டீஸ் அனுப்பினார்கள். இத்தனை ஆண்டுகளாக வசித்து வந்த வீட்டை இடிக்க முயல்வதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள இங்கு வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அஜினை அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி உய்யகொண்டான் திருமலை பகுதியில் நேற்று மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக இருந்தனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் திடீரென ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறவில்லை. இதனால் எந்த பிரச்சினையும் இருக்காது என்று போலீசார் நினைத்திருந்தனர்.
இந்த நிலையில் கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகம் முன்பு வாலிபர் திடீரென தீக்குளிக்க முயன்ற சம்பவம் நடந்தது. நீண்ட நேரமாகியும் சம்பவ இடத்துக்கு போலீசார் வரவில்லை. நுண்ணறிவு பிரிவு ஏட்டு மட்டுமே அந்த வாலிபரை தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றார்.
Related Tags :
Next Story