வேலூர், திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு பெண் உள்பட 7 பேர் பலி
வேலூர், திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு பெண் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
வேலூர்,
வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பது போன்று தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுவரை வேலூர் மாவட்டத்தில் 180-க்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.
வேலூரில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனை மற்றும் திருவண்ணாமலையில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் விவரம் வருமாறு:-
வேலூர் மாவட்டம், காட்பாடி வெங்கடேசபுரம் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 88) கொரோனா தொற்று காரணமாக நேற்று முன்தினமும், விருதம்பட்டு சிவராஜ்தெருவை சேர்ந்த மாணிக்கம் (72) நேற்று காலையிலும் வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருவரும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.
இதேபோன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட வேலூர் கிருஷ்ணப்ப செட்டி தெருவை சேர்ந்த சோமு (71) கடந்த 3-ந்தேதியும், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நவபாளையத்தை சேர்ந்த குப்புசாமி என்பவர் கடந்த 8-ந்தேதியும், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மேட்டுபாளையத்தை சேர்ந்த மோகன் (60) கடந்த மாதம் 13-ந்தேதியும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 3 பேரும் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலையை சேர்ந்த 57 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதேபோல் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 57 வயது ஆண் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 7 பேரின் உடல்களும் முழுபாதுகாப்புடன் அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story