ஆரணியில் வாடகை பாக்கி செலுத்தாத 7 நகராட்சி கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு
ஆரணியில் வாடகை பாக்கி செலுத்தாத 7 நகராட்சி கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
ஆரணி,
ஆரணி நகராட்சியில் காந்தி ரோடு, மார்கெட் ரோடு, அண்ணா சிலை, சூரியகுளம், மணிக்கூண்டு, பெரியார் மாளிகை, புதிய, பழைய பஸ் நிலையங்கள், பழக்கடை வளாகம் பகுதிகளில் நகராட்சி கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த கடைகளுக்கு கடந்த 2017-ம் ஆண்டு வாடகை பன்மடங்கு உயர்த்தப்பட்டது.
இதுதொடர்பாக 275 நகராட்சி கடைக்காரர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் உயர்த்தப்பட்ட வாடகையில் 50 சதவீதம் கட்ட வேண்டும் கோர்ட்டு தீர்ப்பளித்தது. ஆனால் இன்றுவரை உயர்த்தப்பட்ட வாடகை சம்பந்தமாக முறையாக வாடகை நிர்ணயம் செய்யாமல், மீண்டும் வாடகை கட்டணத்தை உயர்த்தி நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆரணி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) டி.ராஜவிஜயகாமராஜ், வருவாய் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், இளநிலை பொறியாளர் சரவணன், குமார், மற்றும் அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் பழைய பஸ் நிலையம் மணிகூண்டு அருகே வருடக்கணக்கில் வாடகை செலுத்தாத 7 நகராட்சி கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த நகராட்சி கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் செந்தில்நாதன் மற்றும் வியாபாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டுவந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கோர்ட்டுக்கு சென்ற கடைக்காரர்களிடம் நாங்கள் வாடகை கேட்கவில்லை. உரிமையாளர்கள் இல்லாத கடைகள் மீதுதான் நடவடிக்கை எடுக்கிறோம் என்று ஆணையாளர் தெரிவித்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story