பேரணாம்பட்டு அருகே, ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் பலி - விளையாடி கொண்டிருந்தபோது பரிதாபம்


பேரணாம்பட்டு அருகே, ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் பலி - விளையாடி கொண்டிருந்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 11 Sept 2020 4:30 AM IST (Updated: 11 Sept 2020 8:45 AM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு அருகே ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் பரிதாபமாக இறந்தனர்.

பேரணாம்பட்டு,

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள எருக்கம்பட்டு கிராமம் புதுமனை பகுதியைச் சேர்ந்தவர் ஜானகிராமன். இவருடைய மனைவி யுவராணி, மகள் கீர்த்தனா (வயது 8). 3-ம் வகுப்பு படித்து வந்தாள். அதே பகுதியைச் சேர்ந்த முரளி என்பவரது மகள் பாவனா (12) 7-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் அதேபகுதியில் கானாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் மழை பெய்துள்ளதால் சுமார் 25 அடி உயரத்துக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனை வேடிக்கை பார்த்து விட்டு அருகில் உள்ள கானாற்றில் குளித்து, துணி துவைக்க அதே பகுதியைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகள் உள்பட சுமார் 20 பேர் நேற்று பகல் 12 மணியளவில் அங்கு சென்றனர். அவர்களுடன் கீர்த்தனா, பாவனா ஆகியோரும் சென்றனர்.

அப்போது கீர்த்தனா, பாவனா ஆகியோர் கானாற்றில் உள்ள தண்ணீரில் இறங்கி விளையாடி கொண்டிருந்தனர். திடீரென அவர்கள் ஆற்றின் ஆழமான பகுதியில் சிக்கி கொண்டனர். மேலும் ஆற்றில் வேகமாக வந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு நீரில் மூழ்கினர்.

இதனை பார்த்து யுவராணி மற்றும் பெண்கள் கூச்சலிட்டனர். ஆற்றில் குளித்து கொண்டிருந்த பொதுமக்கள் ஆற்றில் குதித்து கீர்த்தனா, பாவனா ஆகியோரை மீட்டனர். பின்னர் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கீர்த்தனா பரிதாபமாக இறந்தாள். பாவனா பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாலை இறந்தாள்.

இதுகுறித்து பேரணாம்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இருவரது உடல்களையும் பார்த்து பெற்றோரும் உறவினரும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

Next Story