கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், விவசாயிகள் அல்லாதவர் கணக்கில் இருந்து மேலும் ரூ.4½ கோடி திரும்ப பெறப்பட்டுள்ளது - அதிகாரி தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் அல்லாதவர் கணக்கில் இருந்து மேலும் ரூ.4½ கோடி திரும்ப பெறப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிசான் சம்மன் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகள் அல்லாதவர்களும் விண்ணப்பித்து நிதி உதவியை பெற்று பெரிய அளவில் முறைகேடு நடந்து இருப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து சென்னை வேளாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் கணினிமையங்கள், வேளாண்மைத்துறை அலுவலகங்களில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது விவசாயிகள் அல்லாதோர் பெயர்களை பதிவு செய்த 2 தனியார் கணினி மையங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும் இந்த முறைகேட்டில் தொடர்புடைய வேளாண்மை உதவி இயக்குனர்கள், ஒப்பந்த ஊழியர்கள் 20 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் மீது விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதுவரை 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் அல்லாத 2 லட்சம் பேரின் பெயரைமுறைகேடாக சேர்த்து நிதி உதவி பெற்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவி தொகையை திரும்ப பெறும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து வேளாண்மைத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிசான் சம்மன் திட்டத்தில் விவசாயிகள் அல்லாத 2 லட்சம் பேரின் பெயர் சேர்க்கப்பட்டு அவர்கள் நிதி உதவி பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 36 ஆயிரம் பேரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.11 கோடி திரும்ப பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 லட்சத்து 64 ஆயிரம் பேரிடம் இருந்து பணம் வசூலிக்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story