மண்டியா கோவிலில் நள்ளிரவில் அரங்கேறிய பயங்கரம் 3 பூசாரிகள் கொலை-பணம் கொள்ளை


மண்டியா கோவிலில் நள்ளிரவில் அரங்கேறிய பயங்கரம் 3 பூசாரிகள் கொலை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 11 Sep 2020 9:57 PM GMT (Updated: 11 Sep 2020 9:57 PM GMT)

மண்டியா அருகே நள்ளிரவில் கோவிலில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 3 பூசாரிகளை கொன்றுவிட்டு உண்டியல் பணத்தை கொள்ளை அடித்து சென்றுவிட்டனர். கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மண்டியா,

கர்நாடக மாநிலம் மண்டியா (மாவட்டம்) டவுனை ஒட்டியுள்ளது, குட்டலு கிராமம்.

3 பூசாரிகள் கொலை

இங்கு பிரசித்தி பெற்ற அர்க்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அதே பகுதியை சேர்ந்த கணேஷ், பிரகாஷ், ஆனந்த் ஆகியோர் பூசாரிகளாக வேலை பார்த்து வந்தனர். அவர்கள் தினமும் கோவிலில் பூஜை, புனஷ்காரங்களை மேற்கொண்டு வந்தனர். மேலும் இரவில் 3 பேரும் கோவிலுக்குள் படுத்து தூங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் கோவிலில் பூஜையை முடித்துவிட்டு 3 பூசாரிகளும் கோவிலில் படுத்து தூங்கினர். அப்போது நள்ளிரவில் மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதை 3 பூசாரிகளும் தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள், 3 பூசாரிகளையும் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். இதில் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து உயிரிழந்தனர்.

உண்டியல் பணம் கொள்ளை

இதைதொடர்ந்து மர்மநபர்கள் கோவிலின் உள்ளே இருந்த 3 உண்டியல்களையும் பெயர்த்து எடுத்து கோவிலில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளனர். பின்னர் அதன் பூட்டுகளை உடைத்த மர்மநபர்கள் அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு, உண்டியல்களை அங்கேயே போட்டு விட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

நேற்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் கதவுகள் உடைக்கப்பட்டு கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அங்கு பூசாரிகள் 3 பேரும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

போலீஸ் விசாரணை

உடனே சம்பவம் குறித்து மண்டியா கிழக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மர்மநபர்கள் நள்ளிரவில் கோவிலில் புகுந்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இதை தடுத்த 3 பூசாரிகளையும் அவர்கள் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும் கோவிலின் வெளியே 3 உண்டியல்களும் கிடந்தன. அதன் அருகில் சில்லரை காசுகள் சிதறி கிடந்தன. அத்துடன் கோவிலில் இருந்த சில பூஜை பொருட்கள், ஆபரணங்களும் கொள்ளை போய் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளை நடந்த கோவிலில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்துகொண்டனர். மேலும் போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

தனிப்படைகள் அமைப்பு

சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் தெற்கு மண்டல ஐ.ஜி. விபுல்குமார், போலீஸ் சூப்பிரண்டு கே.பரசுராம் மற்றும் போலீசார் சம்பவ இடங்களை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் இந்த பூசாரிகளை கொன்று கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய மர்மநபர்களை பிடிக்க தனிப்படைகள் அமைத்து போலீஸ் சூப்பிரண்டு கே.பரசுராம் உத்தரவிட்டுள்ளார். அவர்கள், தலைமறைவான கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். உண்டியல்களில் எவ்வளவு பணம் இருந்தது என்பது தெரியவில்லை. அதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுதொடர்பாக மண்டியா கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 பூசாரிகளை கொலை செய்து கோவிலில் கொள்ளை நடந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

எடியூரப்பா இரங்கல்

இந்த சம்பவம் தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், மண்டியா அர்க்கேஸ்வரர் கோவிலில் 3 பூசாரிகளை கொன்று மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளனர். இந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. கொலையான 3 பூசாரிகளின் குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த கொலையில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பலியான 3 பூசாரிகளின் குடும்பத்தினருக்கும் கர்நாடக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story