நாகையில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினி - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்
நாகையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினிகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் பிரவீன் நாயர் தலைமையில் நடைபெற்றது. கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினி வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வருவாய்த்துறை வழியாக அனைத்து திட்டங்களும் இணையவழி சேவைகள் மூலம் துரிதமாக மக்களுக்கு சென்றடையும் வகையில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி உள்ளது. இதன்மூலம் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உட்பட 22 வகையான சான்றிதழ்கள் கிராம நிர்வாக அலுவலர்களின் இணையதள பரிந்துரை மூலம் வழங்கப்படுகிறது. விவசாய தொழிலில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு மானியம் பெறுவதற்காக சிறு, குறு, விவசாயி சான்று மற்றும் விவசாய வருமான சான்று வழங்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு விவசாய கடன், பயிர்க்காப்பீடு, விவசாய நகைக்கடன் மற்றும் அரசின் விவசாய மானியங்கள் பெறுவதற்காக வழங்கப்படும் பெயர் அடங்கல் விவரங்கள் அடங்கிய சான்று மற்றும் பயிர் விவரங்கள் தற்போது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. நாகை மாவட்டத்தில் 1.4. 2014 முதல் 10.9.2020 வரை வருவாய்த்துறை மூலம் பல்வேறு இணையவழி சான்றிதழ்கள் பெறவேண்டி 3 லட்சத்து 65 ஆயிரத்து 43 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இதில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 821 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு இணையவழி மூலம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. , மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்க.கதிரவன், மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, வருவாய் கோட்டாட்சியர் பழனிகுமார் (நாகை) , மகாராணி (மயிலாடுதுறை) உள்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story