ஊத்துக்கோட்டையில் பெண்ணிடம் நகை பறித்த ஊர்க்காவல் படை வீரர் கைது


ஊத்துக்கோட்டையில் பெண்ணிடம் நகை பறித்த ஊர்க்காவல் படை வீரர் கைது
x
தினத்தந்தி 11 Sep 2020 11:25 PM GMT (Updated: 11 Sep 2020 11:25 PM GMT)

ஊத்துக்கோட்டையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த ஆந்திர மாநில ஊர்க்காவல் படைவீரர் மற்றும் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே உள்ள சீதஞ்சேரியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 39). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊத்துக்கோட்டை பகுதியில் உள்ள டெய்லரிடம் ஜாக்கெட் தைத்து வாங்கிவிட்டு ஊருக்கு செல்ல ஊத்துக்கோட்டை பஸ் நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

ரெட்டித் தெருவில் சென்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் விஜயலட்சுமி அணிந்திருந்த 3 அரை பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டனர். இது குறித்து விஜயலட்சுமி ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது வழிப்பறி நடந்த தெருவில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் ஆராய்ந்த போது, அதில் ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிளில் 2 பேர் தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

2 பேர் கைது

மேலும் அந்த மோட்டார் சைக்கிளில் போலீஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக பணிபுரியும் கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த குணா (28), மற்றும் அவரது உறவினரான கல்லூரி மாணவன் தருண் (19) ஆகியோர் பெண்ணிடம் தங்க நகை பறித்து சென்றது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் குணா, தருண் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து தங்க சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 2 நபர்களை போலீசார் ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஆந்திராவில் உள்ள பீலேறு ஜெயிலில் அடைத்தனர்.

Next Story