பொன்னமராவதி அருகே வீடு புகுந்து மூதாட்டியை கட்டிப்போட்டு நகை கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
பொன்னமராவதி அருகே காட்டுப்பட்டியில் வீடு புகுந்து மூதாட்டியை கட்டிப்போட்டு நகையை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பொன்னமராவதி,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் காட்டுப்பட்டியை சேர்ந்தவர் நடேசன். இவரது மனைவி வைரமுத்து (வயது 78). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடேசன் இறந்து விட்டார். இதனால் வைரமுத்து தனியாக வீட்டில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் 3 மர்மநபர்கள் வைரமுத்துவின் வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்கள் வைரமுத்துவிடம், உங்கள் உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். அதனால், உங்களை அழைத்து வரச் சொன்னார்கள் என்று கூறியுள்ளனர். இதை நம்ப மறுத்து யோசித்துக்கொண்டிருக்கும்போது, மர்மநபர்கள் திடீரென்று அவரை கீழே தள்ளிவிட்டு, அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரம், தோடு உள்ளிட்ட 6¼ பவுன் நகைகளை பறித்தனர்.
இதனையடுத்து அவர் சத்தம்போட்டதால், அவரை ஒரு தூணில் கட்டிப்போட்டு மிரட்டி பீரோ சாவியை கேட்டுள்ளனர், கொடுக்க மறுத்ததால் பீரோவை உடைத்துள்ளனர். அதில் ஒன்றும் இல்லாததால் பொருட்களை களைத்து போட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதற்கிடையில் சத்தம்கேட்டதால் அக்கம்பக்கத்தினர் வந்துள்ளனர். அப்போது, மூதாட்டி கட்டப்பட்டு இருந்ததால் அவரை அவிழ்த்து விட்டனர். பின்னர் இது குறித்து பொன்னமராவதி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைவிரல் ரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்து கொண்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story