முகக்கவசம் இன்றி வெளியே வந்தால் ரூ.500 அபராதம் தானே மாநகராட்சி கமிஷனர் உத்தரவு


முகக்கவசம் இன்றி வெளியே வந்தால் ரூ.500 அபராதம் தானே மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
x
தினத்தந்தி 12 Sep 2020 9:22 PM GMT (Updated: 12 Sep 2020 9:22 PM GMT)

முகக்கவசம் இன்றி வெளியே வந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தானே மாநகராட்சி கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தானே,

மராட்டியத்தில் நாளுக்கு, நாள் கொரோனா பாதிப்பு தீவிரமாகிக்கொண்டே போகிறது. இதிலும் மும்பை, தானே, புனே உள்ளிட்ட நகரங்கள் அதிக பாதிப்புக்கு ஆளாகி வருகின்றன.

குறிப்பாக தானே நகரில் நேற்று முன்தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்து 463 ஆக உயர்ந்தது. இதுவரையில் 885 பேர் வைரசுக்கு பலியாகி உள்ளனர். படிபடியாக அறிவிக்கப்படும் தளர்வும், மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதும், சமூக இடைவெளி மற்றும் முககவசம் அணிதல் போன்ற விதிமுறைகளை மக்கள் சரிவர பின்பற்றாததுமே இந்த பாதிப்புக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தானே நகரில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை கருத்தில் கொண்டு விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த தானே மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அபராதம்

இந்த நிலையில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என தானே மாநகராட்சி கமிஷனர் விபின் சர்மா வலியுறுத்தினர். மீறி வெளியே சுற்றுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். தானே மாவட்டத்தில் உள்ள பிற மாநகராட்சிகளும் இதேபோன்ற அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதே போல அருகே உள்ள பால்கர் மாவட்டத்திலும் முகக்கவசம் அணியாமல் செல்லுபவர்களுக்கும் அபாரதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Next Story