தேர்தல் நடத்தை விதி மீறல்: முதல்-மந்திரி எடியூரப்பா மீதான வழக்கு ரத்து கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு


தேர்தல் நடத்தை விதி மீறல்: முதல்-மந்திரி எடியூரப்பா மீதான வழக்கு ரத்து கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு
x
தினத்தந்தி 12 Sep 2020 9:57 PM GMT (Updated: 12 Sep 2020 9:57 PM GMT)

தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக முதல்-மந்திரி எடியூரப்பா மீது பதிவான வழக்கை ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு கூறியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு (2019) பெலகாவி மாவட்டம் கோகாக் தொகுதிக்கு நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து முதல்-மந்திரி எடியூரப்பா பிரசாரம் செய்திருந்தார். அப்போது அவர், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்ததாக, முதல்-மந்திரி எடியூரப்பா மீது கோகாக் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

அந்த வழக்கை விசாரித்த கோகாக் போலீசார், முதல்-மந்திரி எடியூரப்பா தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறவில்லை, அவர் குற்றமற்றவர் என்று கூறி கோகாக் கோர்ட்டில் ‘பி‘ அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். போலீசார் தாக்கல் செய்த ‘பி‘ அறிக்கையை எதிர்த்து கோகாக் போலீஸ் நிலையத்தில் எடியூரப்பாவுக்கு எதிராக புகார் கொடுத்திருந்தவர், கோகாக் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு போலீசார் தாக்கல் செய்த ‘பி‘ அறிக்கையை தள்ளுபடி செய்ததுடன், முதல்-மந்திரி எடியூரப்பா கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பி உத்தரவிட்டு இருந்தது.

வழக்கை ரத்து செய்து தீர்ப்பு

இதையடுத்து, முதல்-மந்திரி எடியூரப்பா மீது பதிவான வழக்கை ரத்து செய்ய வேண்டும், அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு கூறப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், முதல்-மந்திரி எடியூரப்பா தாக்கல் செய்திருந்த மனு மீதான தீர்ப்பை நேற்று முன்தினம் நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் கூறி இருந்தார்.

அப்போது முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராக கோகாக் போலீஸ் நிலையத்தில் பதிவான தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் வழக்கை ரத்து செய்து நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும் கோகாக் கோர்ட்டில் எடியூரப்பாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட சம்மனையும் ரத்து செய்து நீதிபதி தீர்ப்பு கூறியுள்ளார். அத்துடன் இந்த வழக்கில் எடியூரப்பாவுக்கு எதிராக சாட்சி, ஆதாரங்கள் இல்லாததாலும், ஏற்கனவே வழக்கு தொடர்பாக போலீசார் கோர்ட்டில் ‘பி‘ அறிக்கை தாக்கல் செய்திருப்பதாலும், இந்த வழக்கை ரத்து செய்திருப்பதாக நீதிபதி கூறியுள்ளார்.

Next Story