முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை துணை முதல்-மந்திரி பேட்டி


முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை துணை முதல்-மந்திரி பேட்டி
x
தினத்தந்தி 13 Sept 2020 3:52 AM IST (Updated: 13 Sept 2020 3:52 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று முன்தினம் முதல்-மந்திரி எடியூரப்பாவை, குமாரசாமி திடீரென்று சந்தித்து பேசி இருந்தார். இந்த நிலையில், எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியில் இருந்து மாற்ற இருப்பதாகவும், அதனால் தான் அவர் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் ஆதரவை பெறுவதற்காக குமாரசாமி சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியானது.

இதுகுறித்து துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோளிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

எடியூரப்பாவை மாற்றும் பேச்சுக்கே...

முதல்-மந்திரி எடியூரப்பாவை குமாரசாமி சந்தித்து பேசிய விவகாரம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகிறது. இந்த சந்திப்பு குறித்து பல்வேறு கோணங்களில் பேசப்படுகிறது. அதுபோன்று வெளியாகும் தகவல்கள் எதுவும் உண்மை அல்ல. பா.ஜனதாவில் எடியூரப்பா முக்கியமான தலைவர் ஆவார். அவரை முதல்-மந்திரி பதவியில் இருந்து மாற்றுவது தொடர்பாக பா.ஜனதாவில் எந்த விதமான பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை.

முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. அதுதொடர்பாக எந்த ஒரு பேச்சும் கட்சிக்குள் எழவில்லை. முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, அரசியல் விவகாரம் தொடர்பாக எடியூரப்பாவை சந்தித்து பேசவில்லை. மாநிலத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மட்டுமே எடியூரப்பாவை சந்தித்து அவர் பேசி இருந்தார்.

விரைவில் நிவாரணம்

அவர்கள் 2 பேரும் சந்தித்து பேசிய விவகாரத்தை பத்திரிகைகளும், தொலைகாட்சி சேனல்களும் தான் தவறாக புரிந்து கொண்டு சில தகவல்களை மக்களிடம் தெரிவித்துள்ளது. இதனால் தேவையில்லாத சர்ச்சைகளும் எழுந்துள்ளது. முதல்-மந்திரி எடியூரப்பா இன்னும் 3 ஆண்டுகள், பதவியில் இருப்பார். அடுத்து நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்பார்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு செய்வதில் அரசு சரியான முடிவை விரைவில் எடுக்கும். மாநிலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை அரசு செய்து வருகிறது. மத்திய அரசிடமும் கூடுதல் நிவாரண உதவி வழங்கும்படி கர்நாடக அரசு வலியுறுத்தி உள்ளது. விரைவில் மத்திய அரசு நிவாரணம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story