நாள்தோறும் 3,500 பேருக்கு சோதனை புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது வளர்ச்சி ஆணையர் தகவல்


நாள்தோறும் 3,500 பேருக்கு சோதனை புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது வளர்ச்சி ஆணையர் தகவல்
x
தினத்தந்தி 12 Sep 2020 11:08 PM GMT (Updated: 12 Sep 2020 11:08 PM GMT)

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் தற்போது குறைந்துள்ளது. நாள்தோறும் 3,500 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்படும் என்று வளர்ச்சி ஆணையர் அன்பரசு கூறினார்.

புதுச்சேரி,

புதுவையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கிராமப்புறங்களிலும் 15 குழுக்கள் அமைத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நகரப்பகுதியிலும் 6 மையங்களில் சோதனை நடத்த உள்ளோம். துணை சுகாதார நிலையங்களில் குறைந்தது 100 சோதனையாவது நடத்த கூறியுள்ளோம்.

கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 1,700 மாதிரிகளை கூடுதலாக பரிசோதித்துள்ளோம். தொற்று பரவல் காரணமாக மேலும் 7 மண்டலங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுகிறது. தொற்று அதிகமாக உள்ள இடங்களில் நடமாடும் வாகனங்கள் மூலம் சோதனை நடத்தப்படுகிறது. தினமும் 3,500 பேருக்கு சோதனை நடத்த கூறியுள்ளோம்.

அதிக சோதனை

தேசிய அளவைவிட 20 மடங்கு அதிகமாக இங்கு சோதனை நடத்தப்படுகிறது. மேலும் தமிழகத்தைவிட 2½ மடங்கு சோதனை அதிகமாக நடக்கிறது. தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நம்மிடம் தற்போது 2 ஆயிரத்து 156 படுக்கை வசதிகள் உள்ளன. கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்னும் 500 படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இங்கு நாள்தோறும் 240 மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. இங்கு கூடுதலாக டெக்னீஷியன்களை நியமித்து சோதனைகள் நடத்த உள்ளோம். வருகிற 16-ந் தேதி (புதன்கிழமை) முதல் இந்த சோதனை மையம் 24 மணி நேரமும் இயங்கும். தினமும் 800 சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

நம்மிடம் 20 ஆயிரம் ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள் உள்ளன. இன்னும் 50 ஆயிரம் கிட்டுகள் வாங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. காரைக்காலில் ஒரே நாளில் 480 சோதனைகளும், ஏனாமில் 310 சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இறப்புக்கு காரணம் என்ன?

சுய உதவி குழுவினரும் தற்போது வீடுதோறும் நடக்கும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இறப்பு விகிதத்தை குறைப்பது தொடர்பாக நமது சுகாதாரத்துறையினர், ஜிப்மர் மற்றும் ஐ.சி.எம்.ஆர். குழுவினர் ஆய்வு நடத்தி உள்ளனர். பெரும்பாலும் பாதிப்பு அதிகரித்த நிலையில் ஆஸ்பத்திரிக்கு வருவதே இறப்புக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. தற்போது இறந்துள்ள 5 பேரில் 4 பேர் நோய் முற்றிய நிலையில் ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளனர்.

புதுவையில் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 2 ஆயிரத்து 156 படுக்கைகளில் இன்னும் 750 படுக்கைகள் காலியாகவே உள்ளன. வெளியில் கிளினிக் நடத்தும் டாக்டர்களிடம் யாரேனும் கொரோனா அறிகுறியுடன் வந்தால் அவர்களை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளோம். அதேபோல் மருந்துக் கடைகளிலும் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றுக்கு மருந்து கேட்டால் அவர்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்குமாறும் கூறியுள்ளோம்.

வெளியில் சுற்றினால் நடவடிக்கை

கொரோனாவுக்கு சித்தா, ஆயுர்வேத சிகிச்சை அளிக்க கூறியுள்ளோம். ஆனால் அதற்கு யாரும் வரவில்லை. வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்கள் வெளியில் சுற்றினால் அவர்களை தனிமைப்படுத்துவோம். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அன்பரசு கூறினார்.

பேட்டியின்போது கலெக்டர் அருண், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story