கொரோனா ஊரடங்கால் வேலை இழப்பு: கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் - உதவி கலெக்டரிடம் கோரிக்கை


கொரோனா ஊரடங்கால் வேலை இழப்பு: கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் - உதவி கலெக்டரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 12 Sep 2020 10:15 PM GMT (Updated: 13 Sep 2020 12:53 AM GMT)

கொரோனா ஊரடங்கால் வேலை இழப்பு ஏற்பட்டதால் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என உதவி கலெக்டரிடம் பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகத்தில் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர், மடப்புரம் கிராமங்களை சேர்ந்த மகளிர் குழுவினர் தாங்கள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். இந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் கடந்த ஆண்டு தனியார் நுண்கடன் நிறுவனத்தில் கடன் பெற்று முறையாக வட்டியும், அசலும் செலுத்தி வந்துள்ளோம். கடந்த மார்ச் மாதம் முதல் அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்து உணவுக்கு சிரமப்பட்டு வருகிறோம். இதற்கிடையே மத்திய- மாநில அரசுகள், கடன் பெற்றவர்களிடம் தவணைத் தொகை வசூல் செய்வதில் நெருக்கடி தரக்கூடாது என உத்தரவிட்டது.

ஆனால் இந்த அரசின் உத்தரவை மதிக்காமல் தனியார் நுண்கடன் நிறுவனங்கள் தினமும் கடன் பெற்ற மகளிர் குழுவினரை கடன் தொகையை வட்டியுடன் செலுத்த வேண்டும் என மிரட்டி வருகின்றனர். மேலும் மகளிர் சுய உதவிக்குழுவினர் மட்டுமின்றி ஏழை அப்பாவி மக்கள் பெற்ற தனிநபர் கடனையும் வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று தனியார் நிதிநிறுவனத்தினர் மிரட்டி வருகின்றனர். இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வறுமையில் வாடும் மகளிர் குழுவினரை காப்பாற்றும் வகையில் நுண் கடன்களை தள்ளுபடி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Next Story