ஆண்டிமடம் அருகே, போதையில் புதுப்பெண்ணை கொன்ற கணவன் கைது


ஆண்டிமடம் அருகே, போதையில் புதுப்பெண்ணை கொன்ற கணவன் கைது
x
தினத்தந்தி 13 Sept 2020 3:45 AM IST (Updated: 13 Sept 2020 7:14 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிமடம் அருகே போதையில் புதுப்பெண்ணை கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

ஆண்டிமடம்,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள வடுகர்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 23). பால் வியாபாரியான இவருக்கும் கல்லாத்தூர் அருகே மங்களம் கிராமத்தை சேர்ந்த பிரியா என்ற பராசக்தி (18) என்பவருக்கும் இடையே கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

தமிழரசனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. வியாபாரத்திற்கு சென்றுவிட்டு தினமும் மது அருந்திவிட்டு, போதையில் தான் வீட்டுக்கு வருவாராம். இது பற்றி பராசக்தி கேட்டால், தகராறு செய்து கடுமையாக தாக்குவாராம். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டிற்கு வந்த தமிழரசன் மது போதையில் வழக்கம்போல மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த தமிழரசன் பராசக்தியின் தலையில் தாக்கியதில் அவர் மயக்கம் அடைந்தார். இதனால் பயந்து போன தமிழரசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த நிலையில் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது, பராசக்தி இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பராசக்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் தப்பி ஓடிய தமிழரசன் மதுபோதையில் இருந்ததால் ஆர்.எஸ்.பதி தோப்பில் தடுமாறி விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டு மயங்கினார். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் தமிழரசனை கைத்தாங்கலாக அழைத்து வந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் தமிழரசனை அடிக்க முயன்றனர். இதையடுத்து போலீசார் அவரை மீட்டு காரில் ஏற்றி கொண்டு சென்றனர்.

பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கைது செய்து விசாரணை நடத்தியதில், மனைவியின் கழுத்தை நெரித்துக் சுவற்றில் வைத்து அழுத்தியததால் அவர் மூச்சுதிணறி மயங்கி விழுந்து இறந்து விட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார். திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story