மாவட்டத்தில், பச்சிளம்குழந்தை உள்பட 33 பேருக்கு கொரோனா - ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூடல்


மாவட்டத்தில், பச்சிளம்குழந்தை உள்பட 33 பேருக்கு கொரோனா - ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூடல்
x
தினத்தந்தி 13 Sept 2020 4:00 AM IST (Updated: 13 Sept 2020 7:55 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் பச்சிளம்குழந்தை உள்பட 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பணியாளர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூடப்பட்டது.

கரூர், 

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பி கொண்டிருக்கிறது. பொதுமக்கள் மார்க்கெட், பஸ் நிலையம் உள்பட அனைத்து இடங்களுக்கும் முன்புபோல் சென்று வருகின்றனர். பொதுமக்களும் தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் வருகின்றனர். ஆனாலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் பச்சிளம்குழந்தை உள்பட 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி காமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பிறந்து 21 நாட்களே ஆன பச்சிளம்குழந்தை, வீரராக்கியத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி, ராமக்கவுண்டனூரை சேர்ந்த 83 வயது முதியவர், அண்ணாநகரை சேர்ந்த 3 வயது சிறுவன், வெங்கமேட்டை சேர்ந்த 40 வயது ஆண், 52 வயது ஆண்.

குளித்தலையை சேர்ந்த 40 வயது ஆண், தண்ணீர்பள்ளியை சேர்ந்த 27 வயது பெண், பசுபதிபாளையத்தை சேர்ந்த 43 வயது ஆண், புலியூரை சேர்ந்த 54 வயது ஆண், தாந்தோணிமலையை சேர்ந்த 26 வயது பெண், 50 வயது ஆண், சின்னாண்டாங்கோவிலை சேர்ந்த 45 வயது பெண், நெரூரை சேர்ந்த 21 வயது வாலிபர், 75 வயது முதியவர், கே.ஆர்.புரத்தை சேர்ந்த 60 வயது முதியவர் உள்பட 33 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களை வெளியேற்றிவிட்டு, அந்த அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. மேலும் நேற்று முன்தினம்முதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை அலுவலகம் செயல்படாது என அந்த அலுவலக நுழைவு வாயிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களும் தங்களுக்கும்கொரோனா பாதித்து இருக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் நேற்று தங்களின் வேலை நிமிர்த்தமாக வந்த பொதுமக்கள் கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீசை கண்டு அதிர்ச்சியுடன் திரும்பி சென்றனர்.

Next Story