கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு இ-பாஸ் இல்லாமல் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்
ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவ்வாறு வந்தவர்களில், இ-பாஸ் இல்லாமல் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
கொடைக்கானல்,
‘மலைகளின் இளவரசி’, ‘கோடை வாசஸ்தலம்’ என்றெல்லாம் அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு உள்ளூர், வெளியூர், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வர தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்களுக்கு மக்களை அனுமதிக்கலாம் என்று அரசு அறிவித்தது. மேலும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல வெளிமாவட்டம், மாநில பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கொடைக்கானலுக்கு மீண்டும் சுற்றுலா பயணிகள் வர தொடங்கியுள்ளனர். இதனால் கொடைக்கானல் புத்துயிர் பெற்றது போன்று காட்சியளிக்கிறது. கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையால் நகர் பகுதி எங்கும் பசுமையும், பூத்துக்குலுங்கும் மலர்களாலும் ரம்மியமாக உள்ளது.
இந்தநிலையில் நேற்றும், இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) வாரவிடுமுறை என்பதால் பழனி, வத்தலக்குண்டு வழியாக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. கார், மோட்டார் சைக்கிள்களில் சாரை, சாரையாக சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிக அளவில் அணிவகுத்து வந்ததால் நேற்று கொடைக்கானல் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொதுவாக கொடைக்கானல் செல்ல பழனி, வத்தலக்குண்டு ஆகியவை பிரதான பாதைகளாக உள்ளன. இதில் திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, ஈரோடு மற்றும் மூணாறு பகுதிகளில் இருந்து வருவோர் பழனி- கொடைக்கானல் மலைப்பாதை வழியே செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வருவோர் வத்தலக்குண்டு வழியாக கொடைக்கானல் வருகின்றனர்.
புகழ்பெற்ற ஆன்மிக தலமான பழனி முருகன் கோவிலுக்கு கடந்த சில நாட்களாக பக்தர்கள் வருகை அதிக அளவில் உள்ளது. அவ்வாறு வரும் பக்தர்கள் பழனி பகுதியில் உள்ள அணைகளுக்கு சென்று வருகின்றனர். சிலர் அய்யம்புளி மலைப்பாதை வழியாக கொடைக்கானலுக்கு சென்று வருகின்றனர்.
இதற்கிடையே கொடைக்கானலில் உள்ள பல்வேறு சுற்றுலா இடங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், நகருக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, அப்பர் லேக்வியூ, பாம்பார் நீர்வீழ்ச்சி, குறிஞ்சி ஆண்டவர் கோவில் உள்பட பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். இதுதவிர வேறு பொழுதுபோக்கு இடங்கள் இல்லாததால், சுற்றுலா பயணிகள் சிலர் மேல்மலை கிராம பகுதிகளுக்கு சென்றனர். குறிப்பாக இயற்கை எழில் கொஞ்சும் மன்னவனூர் ஏரி, கூக்கால் ஏரி பகுதிகளுக்கு சென்று பொழுதை போக்கினர்.
சுற்றுலா பயணிகள் வருகையை தொடர்ந்து நகரில் உள்ள ஒருசில பெரிய ஓட்டல்கள் திறந்திருந்தன. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களை உடனடியாக திறப்பதுடன், நட்சத்திர ஏரியில் படகுசவாரியையும் தொடங்க வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியிலும், பழனி வழியாக வரும் மலைப்பாதையில் அய்யம்புள்ளியிலும் சோதனை சாவடிகளில் பரிசோதனை செய்யப்படுகின்றனர்.
அப்போது இ-பாஸ் இல்லாமல் வரும் சுற்றுலா பயணிகளை போலீசார் திருப்பி அனுப்பிவைக்கின்றனர். இ-பாஸ் எடுத்து வந்தவர்களை மட்டுமே நகருக்குள் அனுமதிக்கின்றனர்.
Related Tags :
Next Story