சிங்கம்புணரி அருகே பிரான்மலையை பாதுகாக்க கோரி ஆர்ப்பாட்டம்
சிங்கம்புணரி, இளையான்குடி, காரைக்குடி, திருப்பத்தூரில் பிரான்மலையை பாதுகாக்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
காரைக்குடி,
சிங்கம்புணரி அருகே உள்ள பறம்புமலை என்று அழைக்கப்படும் பிரான்மலையை பாதுகாக்க வேண்டும், அந்த பகுதியில் குவாரி அமைப்பதை கைவிட வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி பறம்புமலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் மக்கள் மன்றம், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, ஆம் ஆத்மி, காங்கிரஸ், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பறம்புமலை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், தமிழக மக்கள் மன்றம் தலைவர் ராசகுமார் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி பி.எல்.ராமச்சந்திரன் மற்றும் சிவபட்டன் ஆகியோர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சின்னக்கண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சங்கு உதயகுமார், மனித நேய மக்கள் கட்சி சித்திக், நாம் தமிழர் கட்சி பிரபாகர், பாட்டாளி மக்கள் கட்சி திருஞானம், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சகுபர்சாதிக், ஆம் ஆத்மி கட்சி இஸ்மாயில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ் மற்றும் கமாரூதின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் இளையான்குடியில் பறம்புமலை பாதுகாப்பு இயக்கம் சார்பாக வாள் மேல் நடந்த அம்மன் கோவில் முன்பு போராட்டம் நடந்தது. இதில் பறம்பு மலையை பாதுகாத்து பெருமைமிக்க சுற்றுலாத்தலமாக மாற்றக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. தனியாருக்கு வழங்கியுள்ள பட்டாவை ரத்து செய்யக் கோரியும், தமிழக அரசு விரைவில் பறம்பு மலையை பாரி மன்னனின் நினைவாக சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.
காரைக்குடி ஐந்துவிளக்கு அருகில் பறம்புமலை பாதுகாப்பு இயக்கம் சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளரும் தமிழக மக்கள் மன்றத் தலைவருமான ராசகுமார் தலைமையில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணை செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலையில் பறம்புமலையினை உடைத்து கல்குவாரியாக மாற்றுவதை நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக நல இயக்கங்களும் இயற்கை ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.
திருப்பத்தூரில் மருதுபாண்டியர் நினைவுத்தூண் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கண்ணகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகேசன், பறம்பு மலை பாதுகாப்பு இயக்க உறுப்பினர்கள் ஆறுமுகம், செல்வகுமார் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் கமருல்ஜமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story