நாட்டு துப்பாக்கிகள் தயாரித்து விற்பனை: அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் கைது
திண்டுக்கல் அருகே நாட்டுத்துப்பாக்கிகள் தயாரித்து விற்பனை செய்த அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
குள்ளனம்பட்டி,
திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம், சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி ஆகியோர் தலைமையிலான போலீசார் சிறுமலை பிரிவு அருகே நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுமலை அடிவாரம் மலை மாதா கோவில் செல்லும் வழியில், சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், திண்டுக்கல் ரெண்டல்லப்பாறையை சேர்ந்த யோவான் (வயது 41) என்றும், நாட்டு துப்பாக்கியை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அவர், திண்டுக்கல் அருகே ரெட்டியபட்டியில் லேத் பட்டறை நடத்தி வருவது தெரியவந்தது. இந்த பட்டறையில் யோவானின் சகோதரர் ஆரோன் (45) மற்றும் தவசிமடையை சேர்ந்த கிருஷ்ணன் (52), நொச்சிஓடைபட்டியை சேர்ந்த பரதன் (48) ஆகியோருடன் சேர்ந்து திருட்டுத்தனமாக நாட்டுத் துப்பாக்கிகளை தயாரித்து விற்பனை செய்யும் திடுக்கிடும் தகவல் வெளியானது.
இதனையடுத்து ஆரோன், கிருஷ்ணன், பரதன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கி ஒன்று, துப்பாக்கிகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் 2 பேரல்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே நாட்டு துப்பாக்கிகள் தயாரித்து யார்? யாரிடம் அவர்கள் விற்பனை செய்தார்கள் என்பது குறித்த விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கைதான பரதன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திண்டுக்கல் கிளையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story