ஏலகிரி மலையில் இன்று நடக்கும் ‘நீட்’ தேர்வு மையத்தை கலெக்டர் நேரில் ஆய்வு


ஏலகிரி மலையில் இன்று நடக்கும் ‘நீட்’ தேர்வு மையத்தை கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 13 Sept 2020 10:45 AM IST (Updated: 13 Sept 2020 10:28 AM IST)
t-max-icont-min-icon

ஏலகிரி மலையில் இன்று நடக்கும் நீட் தேர்வு மையத்தை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஜோலார்பேட்டை,

தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘நீட்’ தேர்வு நடக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடியில் உள்ள ஜெயின் மகளிர் கல்லூரி, ஏலகிரி மலையில் உள்ள தொன் போஸ்கோ கல்லூரி ஆகியவற்றில் 1,800 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர். அதில் ஏலகிரி மலையில் உள்ள தொன்போஸ்கோ கல்லூரியில் மொத்தம் 900 பேர் அமர்ந்து தேர்வு எழுதும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கட்டிட வளாகம் மொத்தம் 7 பிளாக்குகளாகப் பிரிக்கப்பட்டு ஒரு அறைக்கு 12 மேசைகள் போடப்பட்டு, வரிசைக்கு 6 பேர் வீதம் மொத்தம் 24 பேர் என சமூக இடைவெளி விட்டு மாணவ, மாணவிகள் அமர்ந்து தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நீர் தேர்வு மையத்தை கலெக்டர் சிவன்அருள், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், சப்-கலெக்டர் அப்துல் முனிர் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்கினர். அத்துடன் ஏலகிரி மலை அடிவாரத்தில் இருந்து மேலே உள்ள கல்லூரிக்குச் செல்லும் இடைப்பட்ட தூரத்தில் மாணவ, மாணவிகளுக்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்படும்போது, அதற்குரிய பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

அப்போது கலெக்டர் சிவன்அருள் கூறியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல் முறையாக இப்போது நீட் தேர்வு நடக்கிறது. தேர்வு நடக்கும்போது 10 போலீசார் வாகனத்தில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபடுவார்கள். மலைப்பாதையின் நடுவே தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்படும். அத்துடன் அடிவாரம், கல்லூரி அருகில் தலா ஒரு தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்படும். மாணவர்கள் இருசக்கர வாகனத்திலோ, நான்கு சக்கர வாகனத்திலோ மலைப்பாதையில் பயணிக்கும்போது டயர் பஞ்சர் போன்ற உபாதைகள் ஏற்பட்டால் உடனே நடவடிக்கை எடுத்து, அவர்களை போலீசார் மூலம் சரியான நேரத்துக்கு தேர்வு மையத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும்.

தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்த பிறகு, முகக் கவசம் அணிய வைத்து, கைகளில் கிருமி நாசினியை பயன்படுத்தி, கபசுர குடிநீர் வழங்கி சமூக விலகலுடன் அறையில் அமரச் செய்து, தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். மாணவர்களின் பெற்றோர் அமர்வதற்காக தனி இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்துவதற்கும் இடவசதி செய்யப்பட்டுள்ளது.

ஏலகிரி மலையில் உள்ள மையத்துக்கு வந்து செல்ல 23 அரசு பஸ்கள், 10 பள்ளி, கல்லூரி பஸ்கள் இயக்கப்பட உள்ளன. 15 அரசு பஸ்கள் திருப்பத்தூரில் இருந்தும், 5 பஸ்கள் வாணியம்பாடியில் இருந்தும் இயக்கப்படுகின்றன. 3 சிறிய பஸ்கள் மலையடிவாரம், பொன்னேரி பகுதியில் இருந்து இயக்கப்படுகின்றன. மாணவர்கள் பகல் 11:30 மணிக்கு மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். வேலூரில் இருந்து திருப்பத்தூருக்கு பள்ளிகொண்டா, ஆம்பூர், வாணியம்பாடி வழியாக கூடுதலாக 15 அரசு பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது தாசில்தார் மோகன், ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார், டாக்டர் சுமன் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Next Story