திருவண்ணாமலை உரக்கிடங்கில் மரபு வழி கழிவுகள் நவீன எந்திரம் மூலம் அகற்றம் - கலெக்டர் ஆய்வு


திருவண்ணாமலை உரக்கிடங்கில் மரபு வழி கழிவுகள் நவீன எந்திரம் மூலம் அகற்றம் - கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 13 Sep 2020 5:00 AM GMT (Updated: 13 Sep 2020 4:58 AM GMT)

திருவண்ணாமலைஉரக்கிடங்கில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சேகரிக்கப்பட்டு வந்த மரபுவழி கழிவுகள் நவீன எந்திரம் மூலம் அகற்றக்கப்பட்டது. அதை, கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் தினமும் 60 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இவை மட்டுமின்றி கார்த்திகை தீபத் திருவிழா நாட்கள், சித்ரா பவுர்ணமி மற்றும் மாதாந்திர பவுர்ணமி நாட்களில் 120 டன் முதல் 270 டன் வரை சேகரமாகும் குப்பைகள் திருவண்ணாமலை அண்ணாநுழைவு வாயில் அருகில் உள்ள ஈசான்யம் உரக்கிடங்கில் சேகரிக்கப்பட்டு வந்தது.

தற்போது நகராட்சி பகுதியில் ஆங்காங்கே உள்ள குப்பைகளை அப்பகுதிக்கு உட்பட்ட நுண்ணுர மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு பிரித்து உரமாக்கப்பட்டு வருகிறது. அதனால் ஈசான்யம் உரக்கிடங்கில் 55 ஆண்டுகளுக்கு மேலாக சேகரிக்கப்பட்டு வந்த மரபுவழி குப்பை கழிவுகளை அகற்றி நிலம் மற்றும் நிலத்தடி நீர் மாசுப்படுவதை தடுக்கும் வகையில் தூய்மைப் பாரத இயக்கம் 2018-19ன் கீழ் ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணி உத்தரவு வழங்கி தற்போது பணி நடந்து வருகிறது.

அந்தப் பணியை நேற்று மாலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தப் பணி ரூ.1.25 கோடி மதிப்பிலான எந்திரத்தின் மூலம் பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள், மண் ஆகியவை தனித்தனியாகப் பிரிக்கப்படுகிறது. அது குறித்து விவரங்களை நகராட்சி ஆணையர் நவேந்திரனிடம், கலெக்டர் கேட்டறிந்தார்.

அப்போது கலெக்டர் கூறுகையில், ஈசான்யம் உரக்கிடங்கில் உள்ள மரபு வழி கழிவுகளில் பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள், மண் ஆகியவைகள் தனியாகப் பிரிக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் குப்பைகளை பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டும், பயன்பாடற்ற மண்ணை பள்ளமான பகுதிகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது. இப்பணியின் மூலம் 6 மாதத்தில் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு விடும், என்றார்.

அப்போது நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஆல்பர்ட், வினோத் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story