புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: பொதுமக்கள் முற்றுகை போராட்டம் - போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
திருப்பூர் பூண்டி ரிங்ரோட்டில் புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அனுப்பர்பாளையம்,
திருப்பூரை அடுத்த பூண்டி பூலுவப்பட்டி ரிங்ரோட்டில் வெங்கமேடு சாலை பிரிவு அருகில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது. மேலும் அந்த கடை நேற்று திறக்கப்பட இருந்த நிலையில், அங்கு விற்பனை செய்வதற்காக சரக்குகள் ஒரு வேனில் கொண்டு வரப்பட்டன. இந்த தகவலறிந்ததும் நேற்று காலை மாநகராட்சி 3-வது வார்டுக்குட்பட்ட பசுமைநகர், மொராஜி தேசாய்நகர், கவுதம் கேண்டி உள்பட சுற்று வட்டாரத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் கவுன்சிலர் மாரப்பன், தி.மு.க. 15 வேலம்பாளையம் பகுதி செயலாளர் ராமதாஸ், வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பெரியார்காலனி எம்.எஸ்.மணி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகி செல்வக்குமார் ஆகியோர் தலைமையில் புதிதாக திறக்கப்பட இருந்த டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர்.
மேலும் அந்த இடத்தில் கடை திறக்கப்பட்டால் பெண்கள், குழந்தைகள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படும் என்று கூறியும், எனவே அந்த பகுதியில் கடையை திறக்கக்கூடாது என்று வலியுறுத்தியும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் அதே இடத்தில் அமர்ந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் மாநகர வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன், இன்ஸ்பெக்டர்கள் முருகையன், கணேசன், டாஸ்மாக் டெப்போ மேலாளர் ரவிச்சந்திரன், வடக்கு தாசில்தார் பாபு மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கடையை திறக்கக்கூடாது என்று உறுதியாக இருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இந்த பிரச்சினை தொடர்பாக நாளை (திங்கட்கிழமை) முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்றும், அதுவரை 2 நாட்களுக்கு கடை திறக்கப்படாது என்றும் உறுதியளித்தனர். இதன் பின்னரே பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக நேற்று காலை முதலே சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story