தொழில் அதிபரை கடத்தி ரூ.2 கோடி பறித்த வழக்கில் கடத்தல்காரர்களுக்கு போலி முகவரியில் சிம்கார்டு வழங்கிய 5 பேர் கைது


தொழில் அதிபரை கடத்தி ரூ.2 கோடி பறித்த வழக்கில் கடத்தல்காரர்களுக்கு போலி முகவரியில் சிம்கார்டு வழங்கிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 13 Sep 2020 8:37 PM GMT (Updated: 13 Sep 2020 8:37 PM GMT)

சென்னை மண்ணடியில் தொழில் அதிபரை கடத்தி ரூ.2 கோடி பறித்த வழக்கில் கடத்தல்காரர்களுக்கு போலி முகவரியில் சிம்கார்டு வழங்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர், 

சென்னை மண்ணடியில் தொழில் அதிபரை கடத்தி ரூ.2 கோடி பறித்த வழக்கில் கடத்தல்காரர்களுக்கு போலி முகவரியில் சிம்கார்டு வழங்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மண்ணடியை சேர்ந்த தொழில் அதிபர் திவான் அக்பரை, கடந்த மாதம் 17-ந் தேதி ஒரு கும்பல் கடத்திச்சென்று அவரிடம் இருந்து ரூ.2 கோடி ஹவாலா பணத்தை மிரட்டி பறித்துச்சென்றன. பயங்கரவாதி தவ்பீக் கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இது தொடர்பாக உமா மகேஷ்வரன், ஆல்பர்ட், பிலால், காதர், அப்துல் ரியாஸ், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக இருந்த திருவொற்றியூரைச் சேர்ந்த சரவணன், ஷேக் ஆகியோரை முத்தியால்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தொழில் அதிபரை கடத்திய வழக்கில் கைதானவர்கள் பயன்படுத்திய சிம்கார்டுகள் தொடர்பாக விசாரிக்கப்பட்டன. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடத்தல்காரர்கள் பயன்படுத்திய சிம் கார்டுகள் போலி முகவரியில் வாங்கப்பட்டது என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் அருண் மேற்பார்வையில், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய், தலைமை காவலர் முருகேசன், போலீஸ்காரர் விமல் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

கடத்தல்காரர்கள் தொழில் அதிபரை கடத்தி அவரது வீட்டில் உள்ளவர்களிடம் செல்போனில் பேசி பணத்தை கேட்டு மிரட்டினர். அதில் ஒரு சிம் கார்டு எண் தனிப்படை போலீசாருக்கு கிடைத்தது. அந்த சிம் கார்டு ஒரு பெண்ணின் பெயரில் இருந்தது. அதை வைத்து அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர், ராயபுரம் புதுமனை குப்பம் பகுதியை சேர்ந்த பிரதீப் என்பவரது மகள் மோனிஷா (வயது 25) என தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவருக்கே தெரியாமல் ஒரு கும்பல் அவரின் ஆதார் அட்டை நகலை எடுத்து 10-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வாங்கி அதை கடத்தல்காரர்களுக்கு கொடுத்த தகவல் வெளியானது. பின்னர் மோனிஷாவை விடுவித்த போலீசார், அவரிடம் இதுதொடர்பாக ஒரு புகாரை வாங்கி தனியாக ஒரு வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் விசாரணையில் இந்த சிம் கார்டுகள் அனைத்தையும் புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவைச் சேர்ந்த அர்ஜூன் (31) என்பவர் செயல்பட வைத்தது தெரிந்தது. இவர், தனியார் சிம் கார்டு கம்பெனி ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். காசிமேடு ஜீவரத்தினம் சாலையில் உள்ள ஒரு செல்போன் கடையில் சிம் கார்டுக்காக மோனிஷா கொடுத்த ஆதார் அட்டை நகலை திருடி, அதன்மூலம் 10-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை செயல்பட வைத்து விற்பனை செய்துள்ளார். அதை ஒரு கும்பல் வாங்கி, கடத்தல்காரர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அந்த மோசடி கும்பலான பெரம்பூரைச் சேர்ந்த பிரேமநாதன் (31), சூளையைச் சேர்ந்த அமர் ஜெயின் (41), மண்ணடியைச் சேர்ந்த அசோகன் முகமது (51), ராயபுரத்தைச் சேர்ந்த காசின் நவாஸ் (34) மற்றும் அர்ஜூன் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சையது என்பவரை தேடி வருகின்றனர்.


Next Story