பங்களா இடிப்புக்கு நீதி கேட்டு கவர்னருடன் நடிகை கங்கனா ரணாவத் சந்திப்பு


பங்களா இடிப்புக்கு நீதி கேட்டு கவர்னருடன் நடிகை கங்கனா ரணாவத் சந்திப்பு
x
தினத்தந்தி 13 Sep 2020 9:13 PM GMT (Updated: 13 Sep 2020 9:13 PM GMT)

பங்களா இடிப்புக்கு நீதி கேட்டு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை நேற்று நடிகை கங்கனா ரணாவத் சந்தித்து பேசினார்.

மும்பை,

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக இந்தி திரையுலகம் மற்றும் மும்பை போலீசார் விசாரணை நடத்தும் விதம் குறித்து நடிகை கங்கனா ரணாவத் கடும் விமர்சனம் செய்தார். மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக கூறிய அவர், சினிமாவில் வரும் மாபியாவை விட மும்பை போலீசாரை பார்த்து பயப்படுவதாகவும் தாக்கினார்.

இதையடுத்து அவருக்கும், ஆளும் சிவசேனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தநிலையில் மும்பை மாநகராட்சி, பாந்திராவில் உள்ள கங்கனாவின் பங்களாவில் சட்டவிரோத கட்டுமான பணிகள் நடந்ததாக கூறி, அதை இடித்து தள்ளியது. இதனால் ஆத்திரம் அடைந்த கங்கனா சமூக வலைதளத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை கடுமையாக விமர்சித்தார். உங்கள் ஆணவம் நொறுங்கும் என்றும் கூறினார்.

கவர்னருடன் சந்திப்பு

இவ்வாறு ஆட்சியாளர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடித்த நடிகை கங்கனா நேற்று மும்பை ராஜ்பவனில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்தார். அப்போது அவர் கவர்னரின் காலில் விழுந்து வணங்கினார். இந்த சந்திப்பின் போது கங்கனாவின் சகோதரி ரங்கோலி சந்தலும் உடன் சென்று இருந்தார். கவர்னருடன் நடந்த சந்திப்பை புகைப்படம் எடுத்தபோது கங்கனாவும், அவரது சகோதரியும் முக கவசத்தை கழற்றினர். கங்கனா தனது பங்களா இடிக்கப்பட்ட விவகாரத்தில் நீதி கேட்டு கவர்னரிடம் முறையிட்டார்.

இதுகுறித்து பின்னர் கங்கனா நிருபர்களிடம் கூறுகையில், “நான் கவர்னரை சந்தித்தேன். அவர் ஒரு மகளை போல என்னிடம் குறைகளை கேட்டறிந்தார். ஒரு குடிமகளாக அவரை சந்தித்தேன். அரசியல் எதுவும் பேசவில்லை. எனக்கு அநீதி இழைக்கப்பட்டது குறித்து கூறினேன். அது ஒரு அநாகரிகமான செயல்” என்றார்.

நடிகை கங்கனா ரணாவத் கவர்னரை சந்தித்து பேசியது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story