வியாபாரிகளிடம் கொள்ளையடித்த பணத்தில் பங்கு பெற்ற பெங்களூரு எஸ்.ஜே.பார்க் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்


வியாபாரிகளிடம் கொள்ளையடித்த பணத்தில் பங்கு பெற்ற பெங்களூரு எஸ்.ஜே.பார்க் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 13 Sep 2020 9:46 PM GMT (Updated: 13 Sep 2020 9:46 PM GMT)

வியாபாரிகளிடம் கொள்ளையடித்த பணத்தில் பங்கு பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில், பெங்களூரு எஸ்.ஜே.பார்க் போலீஸ் இன்ஸ்பெக்டரை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.

பெங்களூரு,

துமகூரு மாவட்டத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் கொப்பரை தேங்காய், புளி உள்ளிட்ட பொருட்களை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த வியாபாரியிடம் வேலை செய்யும் 2 ஊழியர்கள் காரில் வந்து பெங்களூரு சிக்பேட்டையில் உள்ள கடைகளில் ரூ.26 லட்சத்தை வசூலித்தனர். பின்னர் அவர்கள் காரில் துமகூருவுக்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த காரை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல், ஊழியர்கள் 2 பேரையும் கடத்தி ரூ.26 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது.

இதுகுறித்து ஊழியர்கள் அளித்த புகாரின்பேரில் சிட்டி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொள்ளை சம்பவம் தொடர்பாக பெங்களூரு எஸ்.ஜே.பார்க் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஜீவன்குமார், அவரது மாமா ஞானபிரகாஷ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்

இந்த நிலையில் கைதான ஜீவன்குமாரிடம் விசாரித்த போது கொள்ளையடித்த பணத்தில் ரூ.6 லட்சத்தை, எஸ்.ஜே.பார்க் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் யோகேஷ்குமாரிடம் கொடுத்ததாக கூறினார். இதுகுறித்த தகவல் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த்தின் கவனத்திற்கு சென்றது. அவர் இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு இருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் ஜீவன்குமாரிடம் இருந்து யோகேஷ் குமார் ரூ.6 லட்சம் பெற்றதாக கூறப்பட்டு உள்ளது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் யோகேஷ் குமாரை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டு உள்ளார். மேலும் யோகேஷ் குமார் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியானது. ஆனால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க யோகேஷ் குமார் முன்ஜாமீன் வாங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story