விதிமுறைகளை பின்பற்றி படகு சவாரி தொடக்கம் சுண்ணாம்பாறு படகு குழாமில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்


விதிமுறைகளை பின்பற்றி படகு சவாரி தொடக்கம் சுண்ணாம்பாறு படகு குழாமில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்
x
தினத்தந்தி 14 Sept 2020 4:07 AM IST (Updated: 14 Sept 2020 4:07 AM IST)
t-max-icont-min-icon

நோணாங்குப்பம் படகு குழாமில் விதிகளை பின்பற்றி படகு சவாரி தொடங்கியதையடுத்து அங்கு வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர்.

அரியாங்குப்பம்,

புதுச்சேரியில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியமானது நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம். புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு கால் பதிக்காமல் செல்வது இல்லை. சுண்ணாம்பாறில் இருந்து படகு சவாரி செய்து ‘பாரடைஸ் பீச்’ சென்று குளித்து மகிழ்வது வழக்கம். இதற்காகவே விடுமுறை நாட்களில் இங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும்.

நீண்ட வரிசையில் காத்திருந்து பல்வேறு விதமான படகுகளில் சவாரி செய்து பாரடைஸ் பீச்சுக்கு சென்று ஆனந்தமாக கடலில் குளித்து விட்டு பொழுதை மகிழ்ச்சியாக கழித்து மீண்டும் கரைக்கு திரும்புவார்கள்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் நோணாங்குப்பம் படகு குழாம் தற்காலிகமாக மூடப்பட்டது. மத்திய அரசின் அடுத்தடுத்த தளர்வுகளுக்குப் பின் படகு குழாம் மீண்டும் திறக்கப்பட்டது. இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 2 வாரமாக புதுவைக்கு சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கியுள்ளனர். நோணாங்குப்பம் படகு குழாமுக்கும் சுற்றுலா பயணிகள் வந்தனர். மத்திய அரசின் வழிமுறைகளை பின்பற்றி படகு சவாரி நடைபெற்று வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர்.

படகில் சமூக இடைவெளி

அதன்படி சுற்றுலா பயணிகளுக்கு கிருமி நாசினி வழங்குவதுடன் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. பின்னர் சமூக இடைவெளியுடன் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர். அதாவது 20 பேர் செல்லும் படகில் 10 பேரும், 40 பேர் செல்லும் படகில் 20 பேரும் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் படகு சவாரி செய்து உற்சாகமடைந்தனர். நேற்று விடுமுறை தினம் என்ற நிலையிலும் குறைந்த அளவிலேயே சுற்றுலா பயணிகளின் வந்திருந்தனர்.

Next Story