பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புதுவையில் 7 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்


பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புதுவையில் 7 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்
x
தினத்தந்தி 14 Sept 2020 4:29 AM IST (Updated: 14 Sept 2020 4:29 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் 15 மையங்களில் நடந்த நீட் தேர்வில் 7 ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். அப்போது அவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

புதுச்சேரி,

நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மே மாத இறுதியில் இந்த தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வு தள்ளி வைக்கப்பட்டு செப்டம்பர் 13-ந் தேதி நடத்தப்படும் என்று மத்திய அரசால் அறிவிக்கப் பட்டது.

நீட் தேர்வுக்கு தமிழகம், புதுவையில் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டன. இருப்பினும் திட்டமிட்டபடி நேற்று இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதற்காக இந்தியா முழுவதும் 3,842 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 15.97 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

கடும் கட்டுப்பாடுகள்

புதுச்சேரி மாநிலத்தில் புதுவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் உள்பட 7,137 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்காக புதுச்சேரி ஜிப்மர் கேந்திர வித்யாலயா பள்ளி, கிறிஸ்டி பொறியியல் கல்லூரி, மணக்குள விநாயகர் பள்ளி, வாசவி இன்டர்நேஷனல் பள்ளி, ஆச்சார்யா கலை அறிவியல் கல்லூரி, ஜெயபிரியா வித்யாலயா பள்ளி, ராஜீவ்காந்தி பொறியியல் கல்லூரி, காமராஜ் மெட்ரிக் பள்ளி, விவேகானந்தா வித்யாலயா பள்ளி உள்பட 15 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

தேர்வு எழுதும் மாணவர்கள் 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று அதிகாலை முதலே தேர்வு மையத்துக்கு மாணவர்கள் வரத் தொடங்கினர்.

கொரோனா தொற்று காரணமாக தேர்வு மையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. அவர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு பகல் 11 மணி முதல் ஒரு மணி நேரத்துக்கு 90 பேர் வீதம் பரிசோதிக்கப்பட்டு தேர்வு மையத்துக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

போலீஸ் எச்சரிக்கை

அப்போது 50 மில்லி அளவு கொண்ட கிருமி நாசினி திரவம், வெளிப்படையான தண்ணீர் பாட்டில், முகக்கவசம், கையுறைகள், தேர்வுக்கான ஆவணங்கள் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தேர்வு அறையில் சமூக இடைவெளியை மாணவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. உடல் வெப்ப பரிசோதனையில் 99.4 டிகிரிக்கு மேல் வெப்பநிலை இருந்தவர்கள் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இதன்பின் மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இதில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

தேர்வு மையங்களுக்கு வெளியே மாணவர்களின் பெற்றோர் காத்திருந்தனர். பல மையங்களில் அவர்களுக்காக தனியாக இடம் ஒதுக்கப்படாததால் ரோட்டில் அமரும் நிலை ஏற்பட்டது. அப்போது கூட்டமாக அமர்ந்து இருந்தனர். இதைப்பார்த்து அந்த பகுதியில் ரோந்து சென்ற போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்ததுடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தினர்.

Next Story