மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ‘நீட்’ தேர்வு ரத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி


மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ‘நீட்’ தேர்வு ரத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 13 Sep 2020 11:04 PM GMT (Updated: 13 Sep 2020 11:04 PM GMT)

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் நேற்று 15 மையங்களில் ‘நீட்’ தேர்வு நடந்தது. தேர்வு நடந்த கிறிஸ்ட் என்ஜினீயரிங் கல்லூரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று மதியம் ஆய்வு செய்தார். அப்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு அங்கிருந்த மாணவர்களின் பெற்றோரை அறிவுறுத்தினார்.

இதன்பின் நிருபர்களுக்கு நாராயணசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாணவர்கள் அவதி

புதுவை, தமிழக அரசுகள் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினோம். மத்திய மனித வளத்துறை மந்திரிக்கும், பிரதமருக்கும் கடிதம் அனுப்பினோம். தமிழகம், புதுவையில் தமிழக அரசின் பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. மற்ற மாநிலங்களில் மத்திய அரசின் பாடத்திட்டம் (சி.பி.எஸ்.இ.) பின்பற்றப்பட்டு வருகிறது. ‘நீட்’ தேர்வை பொறுத்தவரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே கேள்விகள் தயாரிக்கப்படுகின்றன.

எனவே நீட் தேர்வை ரத்து செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டில் புதுவை, தமிழக அரசுகள் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. தி.மு.க. சார்பிலும் பெற்றோர்கள் தரப்பிலும் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அனைத்து மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. எனவே மாணவர்கள் தற்போது கடும் அவதி அடைந்துள்ளனர்.

ரத்து செய்வோம்

இது கொரோனா நேரம் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணியவேண்டும். பல பாதுகாப்பு அம்சங்கள் வேண்டும். யாருக்கு கொரோனா வரப்போகிறது என்பது தெரியாது. இதுபோன்று தேர்வு நடத்துவது மாணவர்கள் உயிருக்கு மிகப்பெரிய ஆபத்து. மாணவர்கள் சிலர் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு பிரதமரும், மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சியும் தான் பொறுப்பு. இது மத்திய அரசின் அதிகாரப் போக்கை தான் காட்டுகிறது. எனவே தான் தேர்வு நடத்தப்படுகிறது.

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ‘நீட்’ தேர்வை ரத்து செய்வோம். புதுவை மாநிலத்தில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய எங்களுக்கு அதிகாரம் கிடையாது. எனவே அதனை நாங்கள் செய்ய முடியாது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே ‘நீட்’ தேர்வை ரத்து செய்வது தான். ஏற்கனவே எங்கள் தேர்தல் அறிக்கையில் அதனை நாங்கள் அறிவுறுத்தி இருந்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story