விவசாயிகளின் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரையும் தண்டிக்க வேண்டும் எச்.ராஜா வலியுறுத்தல்


விவசாயிகளின் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரையும் தண்டிக்க வேண்டும் எச்.ராஜா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 Sep 2020 11:08 PM GMT (Updated: 13 Sep 2020 11:08 PM GMT)

விவசாயிகளின் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரையும் தண்டிக்க வேண்டும் என்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தினார்.

வள்ளியூர்,

எந்த தேர்வையும் மாணவர்கள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து ஆசிரியர்களும், பெற்றோர்களும் கற்று கொடுக்க வேண்டும்.

தமிழகத்தில் நீட் தேர்வு குறித்து போராட்டம் நடத்த தி.மு.க.வினர் மாணவர்களை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக அவர்களை தற்கொலைக்கு தூண்டுகிறார்கள். தமிழகத்தில் ஜெ.இ.இ. தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத எதிர்க்கட்சியினர், நீட் தேர்வுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?.

விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்குகிறது. தமிழகத்தில் இந்த திட்டத்தில் 5 லட்சம் போலி விவசாயிகளை சேர்த்து, ரூ.110 கோடி மோசடி செய்துள்ளனர். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரையும் தமிழக அரசு தண்டிக்க வேண்டும்.

பா.ஜனதா கூட்டணி

வருகிற சட்டசபை தேர்தலில் ஊழலுக்கு எதிரான கொள்கையை பா.ஜ.க. முன்னிறுத்தும். மீண்டும் மொழியை வைத்து பிழைப்பு நடத்தலாம் என்று தி.மு.க. நினைப்பது தவறு. இருமொழி கொள்கையை ஆதரிப்பவர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சமச்சீர் கல்வியில் சேர்த்து விட்டு பேசுங்கள். தமிழக அரசு இருமொழி கொள்கையை ஆதரிக்கும் என்றால், அரசு நடத்தும் சில பள்ளிகளில், உருது மொழி கற்று கொடுப்பது எப்படி?. எம்மதமும் சம்மதம் என்பது ஏற்புடையது என்றால், எம்மொழியும் நம் மொழி என்று சொல்வதும் ஏற்புடையது தான்.

பா.ஜ.க ஆன்மிக அரசியலைத்தான் செய்து வருகிறது. தமிழகத்தில் வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கூட்டணிதான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக வள்ளியூர் தனியார் மண்டபத்தில் நடந்த பா.ஜ.க. மாவட்ட செயற்குழு கூட்டத்தில், தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். மாவட்ட தலைவர் மகாராஜன், பொதுச்செயலாளர் தமிழ் செல்வன், செயலாளர்கள் குமார் முருகேசன், பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story