திருச்செந்தூர் கோவில் ஆவணி திருவிழா: சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளினார்


திருச்செந்தூர் கோவில் ஆவணி திருவிழா: சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளினார்
x
தினத்தந்தி 13 Sep 2020 11:37 PM GMT (Updated: 13 Sep 2020 11:37 PM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழாவின் 8-ம் திருநாளான நேற்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளினார்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 8-ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனையும், பின்னர் உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் வெண்பட்டு அணிந்து, வெள்ளை நிற மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் உலா வந்தார்.

பச்சை சாத்தி

உலாவுக்கு பின்னர் 108 மகாதேவர் சன்னதி முன்பு வந்த சுவாமி சண்முகருக்கும், வள்ளி-தெய்வானைக்கும் அபிஷேகம், அலங்காரமாகி பகல் 11 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 11.30 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானை அம்பாளுடன் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் உலா வந்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நேற்று முழுவதும் கோவிலுக்குள் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

தேரோட்டம் நடைபெறாது

மேலும், ஆவணி திருவிழாவின் 10-ம் திருநாளான நாளை (செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் நடைபெறாது. ஆனால் சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானையுடன் கேடய சப்பரத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் அம்ரித் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Next Story